கழிவு நீரை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லையே.. ராணிப்பேட்டையில் அவலம்
மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உரிய உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றி வரும் அவலம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பணியாளர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு சாதனங்களான கையுறை, முகக்கவசம், மற்றும் கால்களுக்கு ஷு ஆகியவை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நேரடியாக கழிவுநீர் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை அவர்கள் வெறும் கைகளால் தூர்வாரியும், அந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தங்களுக்கு கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த ஒப்பந்த பணியாளர்கள், வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் மட்டுமே ஈடுபடுத்த விட வேண்டும் என்ற விதியை மீறி, அவர்கள் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவது வேதனைக்குரிய விஷயம் என ஒப்பந்த பணியாளர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
இதனால், மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வாலாஜா நகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் இந்நிலையை மாற்றி பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
What's Your Reaction?