ஹரியானாவில் பாஜகவுக்கு சறுக்கல்.. ஆட்சி பறிபோகிறதா? காங்கிரஸ் ஆடும் அரசியல் சதுரங்கம்.. பின்னணி என்ன..?
ஹரியானா மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் குறித்து பேசுவதற்காக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், அம்மாநில ஆளுநரிடம் நாளைய தினம் நேரம் ஒதுக்கச்சொல்லி கேட்டிருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. 90 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை. ஆனால் 2019 தேர்தலில் பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 30 இடங்களையும், துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சி 10 இடங்களையும் கைப்பற்றின. மேலும், சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. அப்போது, ஜேஜேபி கட்சியின் துஷ்யந்த் சவுதாலாவிற்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே 4 ஆண்டுகள் ஆட்சி நிறைவு பெற்ற நிலையில், சமீபத்தில் பாஜகவுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாக ஜேஜேபி கட்சி அறிவித்தது. இதனையடுத்து, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இந்நிலையில், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் மூவர் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால், பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. 43 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பாஜகவிற்கு உள்ளது. ஆனால் ஆட்சியில் நீடிக்க பாஜகவிற்கு 45 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், காங்கிரஸ் – ஜேஜேபி – சுயேட்சைகள் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தால், ஆதரவளிப்பதாக ஜேஜேபி கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்திருந்தார்.
ஆனால், ஹரியானா சட்டசபைக்கு வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், பாஜக பெரும்பான்மையை நிரூபித்து 6 மாதங்கள் முடிவடையாததாலும், காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ஹரியானா காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா, அசாதாரண அரசியல் சூழல் குறித்து பேசுவதற்காக ஹரியானா மாநில ஆளுநரிடம் நாளை (மே 10) நேரம் ஒதுக்கச் சொல்லி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆடும் அரசியல் சதுரங்க விளையாட்டால் ஹரியானாவில் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
What's Your Reaction?