பட்டாசு ஆலை விதிமீறல்.. குண்டர் சட்டம் பாயும்.. விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை..

May 11, 2024 - 08:09
பட்டாசு ஆலை விதிமீறல்.. குண்டர் சட்டம் பாயும்.. விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை..

விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தில் சமீபகாலமாக பட்டாசு ஆலை வெடிவிபத்துகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. விபத்துகளைத் தடுக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 9) சிவகாசியில் உள்ள ஸ்ரீசுதர்ஸன் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அனுமதி பெறப்பட்ட அறையில் பட்டாசு தயாரிக்காமல் மரத்தடியில் பட்டாசு தயாரித்ததும், அளவுக்கு அதிகமாக ஆட்களை வைத்து பணி செய்ததும்தான் இந்த விபத்துக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த விபத்தின் எதிரொலியாக, பட்டாசு ஆலைகளில் நிகழும் விபத்துகள் தொடர்பாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று (மே 10) நடைபெற்றது. 

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு உரிமையாளர்கள் மற்றும் போர்மேன் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரசாயனங்கள் மற்றும் தொழிலாளர்களை பயன்படுத்தினாலோ பட்டாசு ஆலைகளை அனுமதியின்றி உள்வாடகை, குத்தகைக்கு விட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், விதிமீறலில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிய, 4 சிறப்பு ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பட்டாசு ஆலை விதிமீறல் குறித்து 94439 67578 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow