மக்களவை தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம் - பிரதமர் மோடி
எங்களது மூன்றாவது பதவிக் காலத்தில், நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது - மோடி
மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் NDA கூட்டணி கட்சிகள் முழுமையாக தயாராக உள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று (மார்ச் 16) அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 19-ம் தேதி முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முழுமையாக தயார். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடம் செல்ல உள்ளோம்" என கூறியுள்ளார்.
"எங்களது மூன்றாவது பதவிக் காலத்தில், நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரான போர் இன்னும் வேகமாக செல்லும். சமூக நீதிக்கான முக்கியத்துவம் வலுவாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக உழைக்கப் போகிறோம். இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் எங்கள் முயற்சியை மேலும் வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
"ஏழைகள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் ஆசீர்வாதத்தால் நான் பெரும் பலத்தைப் பெறுகிறேன். 'நான் மோடியின் குடும்பம்' என மக்கள் கூறுவது என்னை மகிழ்ச்சியில் நிரப்புகிறது" எனவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?