மாண்டவர்கள் ஆயிரமாயிரம்; மீண்டவர்கள் சொற்பம் - கள்ளச்சாராய மரணம் குறித்து எம்.எஸ்.பாஸ்கர் வேதனை
இந்த வழக்கில் மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தன நாள் வாங்கி உள்ளார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி, அந்த அடிமைத்தனமே நோயாகி மாண்டவர்கள் ஆயிரமாயிரம். மீண்டவர்கள் சொற்பம் என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி என்பவர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பலர் இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர்.
இதை குடித்த பலர் கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயங்கி விழுந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜிப்மர் மருத்துமனையில் சிகிச்சை பெறும் 16 பேரில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தவிர மற்ற மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், கோவிந்தராஜின் மனைவி விஜயா, கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன் இவர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை, சின்னதுரைக்கு மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் மற்றும் சின்னதுரை நண்பர்களான ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகிய ஏழு நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகிய மூன்று நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை மாதம் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தன நாள் வாங்கி உள்ளார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்த மெத்தனால் ட்யூப்களை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், "காலம் காலமாக கள்ளச்சாராயம் அல்லது விஷசாராயம் குடித்து இறப்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. விற்பது குற்றமா? குடிப்பது குற்றமா? சந்தோஷத்திற்காக தொடங்கி, அதற்காகவே பழகி, பழக்கத்திற்கு அடிமையாகி, அந்த அடிமைத்தனமே நோயாகி மாண்டவர்கள் ஆயிரமாயிரம். மீண்டவர்கள் சொற்பம்.
அந்த அடிமைத்தனத்தை மூலதனமாக்கி காசு பார்க்கும் கல் நெஞ்சர்கள் அந்த விஷத்தை குடித்துப்பார்த்து பிறகு விற்றதுண்டா? அவர்களது மனைவிகளின் தாலி அறுபட்டதுண்டா?
இனிமேலாவது விற்பவர்களும் குடிப்பவர்களும் நிறுத்துவார்களா? இப்படி எத்தனையோ கேள்விகள் உண்டு. ஆனால் விடைதான் இல்லை! இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?