”பைக்குல என்மேல இடிக்கவா வர?” பிரபல ரவுடியின் மகனுக்கு வெட்டு… பெரம்பூரில் பரபரப்பு

சென்னை வியாசர்பாடி அருகே பிரபல ரவுடியின் மகனை வெட்டிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Apr 23, 2024 - 17:26
”பைக்குல என்மேல இடிக்கவா வர?” பிரபல ரவுடியின் மகனுக்கு வெட்டு… பெரம்பூரில் பரபரப்பு

வியாசர்பாடி அடுத்த பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். பிரபல ரவுடி வெள்ளை ரவியின் மகனான இவர் அதே பகுதியில், துரித உணவகம் (Fast Food Hotel) ஒன்றை நடத்தி வருகிறார்.  இவர் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, இவர் தனது இருசக்கர வாகனத்தில், மேல்பட்டி பொன்னப்ப தெருவில் நின்றிருந்த குமார் என்பவர் மீது உரசுவது போல வேகமாக சென்றுள்ளார்.

 

அப்போது, இடிப்பது போல வேகமாக செல்வது ஏன் என கேட்டபோது, குமார் – கோகுல்ராஜ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதனையடுத்து இருவரும் தங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்க, இது கோஷ்டி மோதலாக மாறியது. இந்த மோதலில், குமாரின் நண்பர்களான லோகேஷ் மற்றும் வேதேஷ் ஆகியோர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கியதில் வெள்ளை ரவியின் மகன் கோகுல்ராஜுக்கு தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.

 

படுகாயமடைந்த கோகுல்ராஜ், பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தலையில் 25 தையல்கள் போடப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கோகுல்ராஜின் தாயார் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த, பெரம்பூர் செம்பியம் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட குமார், லோகேஷ் மற்றும் வேதேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

பைக்கில் வேகமாக மோதுவது போல் வந்துவிட்டு, ஏன் என தட்டிக்கேட்டதற்கு, தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாக கைது செய்யப்பட்ட மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow