கரண்ட் கட்.. கருகும் பயிர்கள்.. நிரந்தர தீர்வு எப்போது? குமுறும் ராணிப்பேட்டை விவசாயிகள்
நெமிலி அருகே தொடர் மின் வெட்டு காரணமாக தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதாக குற்றம் சாட்டியுள்ள விவசாயிகள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பனப்பாக்கம் பகுதியில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று ஒருநாள் முழுவதும் மின்சாரம் தடைபட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பனப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல், கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பனப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை, விவசாய சங்க தலைவர் சுபாஷ் தலைமையில் விவசாயிகள், முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் மின் கோட்ட பொறியாளர் துரை சங்கர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்காலிகமாக மின்வெட்டு இன்றி மின்விநியோகம் அளிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இப்பிரச்சினை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியில் இருந்து பனப்பாக்கம் வரும் மின்சாரம் கோடை காலம் என்பதால் பற்றாக்குறையாக வருவதாகவும், இதனால் மின் விநியோகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது என்றும் கூறினர். மேலும் பனப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக ஓராண்டுக்குள் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தனர்.
What's Your Reaction?