சென்னையில் அதிகரிக்கும் போதை மாத்திரை விற்பனை.. ரூட்டு தல யாரு? சண்டையில் சிக்கிய ரவுடிகள்
சென்னை கோயம்பேட்டில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் வேதவன்னியம்மன் நகரை சேர்ந்த ரவுடி முகமது ஆதம் மீது கோயம்பேடு காவல் நிலையத்தில் போதை மருந்து விற்பனை, வழிப்பறி, அடிதடி என 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் ரவுடி ஆதம், கோயம்பேடு டாய்ஷா குடியிருப்பு அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் பின்புறத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கேம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து ரவுடி ஆதம் கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் போதை மருந்து விற்பனையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ரவுடி ஆதமை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 6 பேர் அடித்து கொன்றது தெரியவந்தது.
கடந்த ஆண்டு கோபால், பாண்டு என்கிற கமலேஷ் ஆகியோர் போதை மாத்திரைகளை வெளிமாநிலத்திலிருந்து வாங்கி வந்து கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர். இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக சந்தேகத்தின் பேரில் கோபால் கடந்த வாரம் ஆதமிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது.
இதன் காரணமாக முகமது ஆதமை கமலேஷ் என்கிற பாண்டு கமலேஷ், திருநாவுக்கரசு, ஜோயல், சந்தோஷ, செல்வா என்கிற வௌ்ளை செல்வா, கோபால் ஆகிய 6 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
What's Your Reaction?