தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதல்..தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும் இன்றும் நாளையும் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 25, 2024 - 14:48
தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதல்..தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. உஷார் மக்களே!

சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 28 முதல் ஜூலை 1ம் தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை: இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரிரு இடங்களில், 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27"-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். ‘

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27 முதல் 29 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வரும் 28ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், லட்சத்தீவு, தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 122% கூடுதலாக பெய்துள்ளது என்றும் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 43.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 97.4 மி.மீ. மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow