இந்தியாவில் முதன்முறை... மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்... ஓம்பிர்லா-கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி!

இந்தியா கூட்டணி கட்சியினர், ''சபாநாயகர் தேர்வுக்கு ஆதரவு அளிக்க தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு விட்டுத் தர வேண்டும்'' என்று நிபந்தனை விதித்தனர். ஆனால் இதை பாஜக ஏற்க மறுத்தது.

Jun 25, 2024 - 14:59
இந்தியாவில் முதன்முறை... மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்... ஓம்பிர்லா-கொடிக்குன்னில் சுரேஷ் போட்டி!
மக்களவை சபாநாயகர் பதவி

டெல்லி: இந்திய வரலாற்றில் முதன்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட பாஜகவின் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணியின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். 

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி 234 இடங்களை பிடித்து வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியது.

இதில் பிரதமர் மோடி உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்றனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மக்களவை தற்காலிக சபாநாயகர் மஹ்தாப் புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், மக்களவைக்கான நிரந்தர சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. மக்களவை சபாநாயகரை போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்ய பாஜக முடிவு செய்தது. இதனால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா கூட்டணியின் கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து மக்களவை சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு இந்தியா கூட்டணி கட்சியினர், ''சபாநாயகர் தேர்வுக்கு ஆதரவு அளிக்க தயார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிகளுக்கு விட்டுத் தர வேண்டும்'' என்று நிபந்தனை விதித்தனர். ஆனால் இதை பாஜக ஏற்க மறுத்தது.

இதனை தொடர்ந்து பாஜக கூட்டணி சார்பில் 17வது மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்தியா கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. 

இதன்பிறகு ஓம்பிர்லா மற்றும் கொடிக்குன்னில் சுரேஷ் தனித்தனியாக சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்தியாவில் இதுவரை மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது இல்லை. ஆளும் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக மக்களவை சபாநாயகரை தேர்வு செய்தன.

ஆனால் இந்த முறை இந்திய வரலாற்றில் முதன்முறையாக  மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஆளும் கூட்டணி, எதிர் கூட்டணி என வாக்கெடுப்பு முறையில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

ஓம்பிர்லா-கொடிக்குன்னில் சுரேஷ் இருவருக்கு யாரில் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகள் கிடைக்கிறதோ, அவர் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். இதில் பாஜக கூட்டணிக்கே அதிக பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் ஓம்பிர்லா தொடர்ந்து 2வது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்  என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow