திரிணாமூல் அலுவலகத்தில் பெண் தொண்டர்களிடம் தொடர் அத்துமீறல் !! ஊடகத்தினரை குற்றம்சாட்டும் போலீசார்...
எந்த பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை எனவும், ஊடகத்தினர் உள்நோக்கத்துடன் வதந்திகளை பரப்பி வருவதாகவும் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலியில் திரிணாமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அக்கட்சியின் பெண் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், உள்நோக்கத்துடன் ஊடகத்தினர் வதந்திகளை பரப்புவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்கம் 24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் என்பவரை விசாரிக்கச் சென்றபோது, அமலாக்கத்துறையினர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளானது. தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தனது உதவியாளர்கள் சிவ பிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தாருடன் சேர்ந்து கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்திலேயே கட்சியின் பெண் தொண்டர்களிடம் தொடர்ந்து அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்காக பணியாற்றக்கூறி, நேரம் காலம் பார்க்காமல் அலுவலகத்துக்கு அழைத்ததாகவும், செல்ல மறுக்கும் பட்சத்தில் கணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தனித்தனியாக போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்கியதில் பாஜக தலைவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சந்தேஷ்காலி கிராமம், காவல்துறையினரின் கடும் பாதுகாப்பில் உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் எந்த பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை எனவும், ஊடகத்தினர் உள்நோக்கத்துடன் வதந்திகளை பரப்பி வருவதாகவும் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?