அரசு மருத்துவமனையில் இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டு... குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அரசு...
மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறும் பிரிவில், இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டுக் கொடுக்கும் அவல நிலை அரங்கேறியிருக்கிறது.
பிறக்கும் போதே சுவாசிக்க சிரமப்படும் குழந்தைகள் அல்லது உடல் உபாதைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். இது அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும், பொதுவாக அரசு மருத்துவமனைகளில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும். அப்படி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இன்குபேட்டர் வசதி உள்ளது.
இங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று இன்குபேட்டரில் வைக்கப்பட்ட நிலையில், அந்த இன்குபேட்டர் சேதம் அடைந்திருப்பதால், அதற்கு கல் வைத்து முட்டுக் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனை கவனித்த பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அங்கிருந்து சரியான பதில் வராததால் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். குழந்தைகளின் உயிரோடு அரசு விளையாடுகிறதா? என கேள்வி எழுப்பியுள்ள மக்கள், மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?