மானாமதுரையில் இருந்து அயோத்திக்கு கிளம்பிய சிறப்பு ரயில்.. பக்தி பரவசத்துடன் பயணத்தை தொடங்கிய பக்தர்கள்...

மானாமதுரையில் இருந்து ரயில் கிளம்பிய போது, பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கமிட்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

Feb 15, 2024 - 11:08
மானாமதுரையில் இருந்து அயோத்திக்கு கிளம்பிய சிறப்பு ரயில்.. பக்தி பரவசத்துடன் பயணத்தை தொடங்கிய பக்தர்கள்...

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு, மானாமதுரையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் ஏராளமான பக்தர்கள் பயணம் மேற்கொண்டு இருக்கின்றனர்.

அயோத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை கடந்த மாதம் 22-ம் தேதி பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மானாமதுரையில் இருந்து அயோத்திக்கு நேற்று (14.02.2024) சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. 

சலுகை கட்டணத்தில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து நேற்று(14.02.2024) இரவு 9.45 மணிக்கு 20 பெட்டிகளுடன் கூடிய அந்த சிறப்பு ரயிலை, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா மற்றும் சிவகங்கை மாவட்ட பா.ஜ.க தலைவர் சத்தியநாதன் உட்பட பலர் மலர்களை தூவி வழியனுப்பி வைத்தனர். இந்த ரயில் மானாமதுரையிலிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர் வழியாக உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்திக்கு வருகிற சனிக்கிழமை(17.02.2024) மதியம் 12:50 மணிக்கு சென்றடைகிறது. பின்னர், அங்கிருந்து மறுமார்க்கத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) இரவு புறப்பட்டு 21.02.2024 அன்று மானாமதுரை வந்தடையவுள்ளது. 

இந்த ரயிலில் தொடர்ந்து 6 நாட்கள் பயணம் செய்யும் பக்தர்களுக்கு உணவு, தங்குமிடம், ராமர் கோயிலில் தரிசனம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஐ.ஆர்.சி.டி.சி ரயில்வே நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. மானாமதுரையில் இருந்து ரயில் கிளம்பிய போது, பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீராம்', 'ஜெய்ஸ்ரீராம்' என முழக்கமிட்டு தங்களது பக்தியை வெளிப்படுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow