ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது - எம்.பி சு.வெங்கடேசன் 

இந்தியாவில் ஆறு நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடந்து வரும் நிலையில் இதனைத் தடுக்க ரயில்வே துறை என்ன செய்யப் போகிறது என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன்.   

Oct 12, 2024 - 14:05
ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது - எம்.பி சு.வெங்கடேசன் 
su.venkatesan

கர்நாடக மாநிலம் மைசூருரிலிருந்து புறப்பட்டு தர்பங்கா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பாக்மதி அதிவிரைவு ரயில்  நேற்றிரவு 9.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் அவற்றில் 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன. விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் 19 பேர் காயமுற்றனர். அவர்களில் படுகாயமுற்ற 3 பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

இந்த விபத்தின் காரணமாக தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக கவரப்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்,  விபத்து நடைபெற்ற இடத்தில், எதனால் இந்த விபத்து நடந்தது என்பது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவின் மூலம் ரயில் விபத்துகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். 
அப்பதிவில் "ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே .ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது?உயிர்ச்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும், ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கித் தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்னதான் செய்யப்போகிறது?" என்று பதிவிட்டுள்ள அவர் அதன் மூலம் தெற்கு ரயில்வே துறைக்கும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைணவுக்கும் கேள்வி எழுப்பியுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow