உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை போல ஒவ்வொரு நாளும் ஐந்தாறு பிரஸ்மீட் கொடுப்பவர் அல்ல. சீமானைப் போல அடிக்கடி செய்தி ஊடகங்களுக்கு மற்றும் சமூக ஊடகங்களுக்கு கன்டென்ட் கொடுப்பவர் அல்ல. இன்னும் சொல்வதானால் அவர் செய்தியில் இடம்பெறுவதே குறைவுதான். ஆனாலும் அவரது பேச்சுகள் எதிர்த் தரப்பினரால் அதிகம் உற்று நோக்கப்படுவது தான் கடந்த சில மாதங்களில் அரசியலில் வியப்பான விஷயம்.
சனாதனம் குறித்த அவரது பேச்சு ஒரு நிமிடத்திற்கும் குறைவானது. ஆனால் அந்தப் பேச்சு தேசிய ஊடகங்களில் பல நாட்கள் விவாத பொருளானது. இந்திய செய்தி முகமை ஒன்று அவர் அதற்கு முன்பு பேசிய எல்லா காணொளிகளையும் எடுத்து ஏதேனும் சர்ச்சையான காட்சித் துண்டை எடுக்க முடியுமா என ஆராய்ந்ததாக தகவல் உண்டு. சனாதனம் குறித்த விவாதத்தில் பங்கேற்குமாறு திமுக பேச்சாளர்களை ஓயாமல் துரத்தினார்கள் என்கிறார் ஒரு ஊடக ஒருங்கிணைப்பாளர். ஆறு மாதம் கடந்தும் இன்றளவும் தேசிய ஊடகங்கள் ஸ்டாலின் ஜூனியர் எனும் அடைமொழியோடு இந்த செய்தியை குறிப்பிடுகின்றன தேசிய ஊடகங்கள்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை திமுக துவங்கிய போதும் உதயநிதி ஸ்டாலின் சற்று தாமதமாகவே அந்த ஓட்டத்தில் இணைந்தார். இருந்தபோதும் எடப்பாடி பழனிச்சாமி தன் பிரச்சாரத்தில் அதிகம் பதில் சொன்னது உதயநிதிக்குத்தான். உதயநிதி புகைப்படத்தை எடுத்துக் காட்டிய பாணியையே எடப்பாடியும் பின்தொடர்ந்தார். இவ்வாறாக மிக சுருக்கமான பங்கேற்பையும் அவர் அரசியலில் முக்கியமான பகுதியாக மாற்றக் கூடியவராக இருக்கிறார். ஒரே செய்தியை மாற்றாமல் பேசுகிறார் எனும் விமர்சனம் இருக்கிறதுதான். ஆனால் 2021 தேர்தலில் அவர் செய்த தொடரச்சியான எய்ம்ஸ் செங்கல் பிரசாரம் இன்றைய தேர்தல் வரைக்கும் நினைவில் இருக்க அந்த பிரசார வடிவம் ஒரு முக்கிய காரணம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அவர் பின்பற்றிய வேன் பிரசார வடிவம் இந்த முறையும் தொடர்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திற்கும் தன் பேச்சின் உள்ளடக்கத்தை மாற்றும் உத்தியை கடைப்பிடிக்கிறார் என்றால் உதயநிதி மக்களோடு உரையாடும் பாணியைப் பின்பற்றுகிறார். ஒரு வழக்கமான மேடைப் பேச்சாக இல்லாமல் ஒரு இயல்பான உரையாடலைப் போல அமைந்திருக்கின்றன அவரது பேச்சுகள். கடினமான அரசியல் செய்திகளைத் தவிர்த்து மக்கள் எளிதில் விளங்கிக்கொள்ளும் பிரச்சினைகளே அவரது தெரிவாக இருக்கிறது. மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருகிறது எனும் தொடர் பிரசாரம் அதற்கான ஒரு எடுத்துக்காட்டு. எடப்பாடி தொகுதியில் “தெருத்தெருவா பிரச்சாரம் பண்ணியும் நீங்க எங்களுக்கு நாமத்தை போட்டுட்டீங்க” என்கிறார். ஏமாற்றத்தைக் காட்டும் அந்த பேச்சுக் கூட அத்தனை பிரெண்ட்லியாக வெளிப்படுகிறது. பெரிய தலைவர்களுக்கு சவால்விடும் சீமான், அண்ணாமலை பேச்சுக்கு மாறான down to earth அணுகுமுறையாக இது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
சுற்றி இருக்கிற மக்களிடம் கேள்வி கேட்டு பதிலைப் பெறுவது என்பதாக இல்லாமல் அவர்களது கமெண்ட்டுகளுக்கும் இயல்பான மொழியில் பதிலளிக்கிறார். தேர்தல் தேதியை தவறாக அவர் சொன்னதைச் சுற்றி நிற்கும் மக்கள் திருத்துகிறார்கள். அதையும் ஏற்றுக்கொண்டு தன் பேச்சைத் திருத்துகிறார். அண்ணாமலை சீமான் ஆகியோரது பேச்சு ஒருவழிப்பாதை போன்றது. இதற்கு முற்றிலும் நேர்மாறான நட்புணர்வு மிக்க பிரசார பாணியை வெற்றிகரமாகக் கைக்கொண்டு இருக்கிறார் உதயநிதி. அவரது முந்தைய மேடைப் பேச்சுகளில் வெளிப்படும் மெல்லிய பதற்றம் இந்த வகை பிரசாரத்தில் இல்லை என்பதால் பிரசாரத்தின் வீரியம் அதிகரித்து இருப்பதை நாம் மறுக்க முடியாது.
அதைவிடவும் முக்கியமான அம்சம் வேட்பாளரை அவர் அணுகுமுறை. தன் நண்பரை அறிமுகப்படுத்துவது போன்ற வாக்கியங்களையும் உடல் மொழியையும் அவர் தமது கட்சி வேட்பாளர்களிடமும் கூட்டணி கட்சி வேட்பாளர்களிடமும் பாவிக்கிறார். பந்தா இல்லாதவர், அதிகார தொனியைக் காட்டாதவர் எனும் பொது பார்வையை இந்த இயல்பு அவருக்கு பெற்று தந்திருக்கிறது.
இந்த பாணியைத் தொடர்வதன் மூலம் அவர் தனக்கு மிகவும் பொருத்தமான உரையாடல் முறையைக் கண்டடைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இதனை இன்னும் மேம்படுத்துவதன் மூலம் இன்றைய சமூக ஊடக தலைமுறைக்கு ஏற்ப பேசும் தலைவர்களைத் திமுக உருவாக்கவில்லை எனும் குறைபாட்டை உதயநிதி ஸ்டாலினால் சுலபமாக தீர்த்து விட முடியும். இன்ஸ்டா தலைமுறைக்கு அதிகம் அறிமுகமான தலைவர்களில் உதயநிதி அணுகுமுறை என்பது அதிகாரத்தைக் காட்டாமல் மக்களைச் சமமாக நடத்துவதாக இருக்கிறது. தேர்தல் அல்லாத காலங்களிலும் அவர் மக்களுடனான உரையாடலை தொடரும் பட்சத்தில் இந்த பேச்சு முன் மாதிரியாக மாறும். சவாடால்களும், தான்தோன்றிதனமாகவும் பேசுவது என்பது நார்மலைஸ் ஆகும் காலத்தில் உதயநிதியின் பாணி கவனம் பெறுவது சமூக ஊடக சூழலுக்கு நல்லது.
2024 தேர்தலில் மெனக்கெடல் எதுவும் பெரிதாக இல்லாமல், அதிகம் ஸ்கோர் செய்தவர் உதயநிதி ஸ்டாலின்தான். இது அவருடைய எதிர்காலத்தையும் திமுக எதிர்காலத்தையும் பிரகாசமாக்குகிறது.