‘உலக சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக ஸ்டாலினை மக்கள் பார்க்கிறார்கள் ’: எடப்பாடி விமர்சனம்
சர்வாதிகாரிகளை புத்தகத்தில் படித்திருப்பார்கள். ஆனால் சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக முதல்வர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ‘தலைநிமிர வைப்பேன்’ என்று வாய் சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம்! உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
`ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல்’ மகளிர் மாநாடு நடத்துகிறார். 56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான், தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள் புலம்புகிறார்கள். பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.
பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், விடியா தி.மு.க-வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்! போராடுபவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது.
பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்’ என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
What's Your Reaction?

