‘பேரவையை ஆளுநர் அவமதிக்கிறார்’- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு வளர்ந்து வருவதை விரும்பாமல் ஆளுநர் இப்படி முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் அவமதிக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து இன்று சட்டமன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானங்களை கொண்டு வந்தார்.அப்போது பேசியதாவது, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம். மசோதா தொடர்பாக ஆளுநர் கோரிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்காமல் இல்லை. ஆனால் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம், ஜனநாயக விரோதம், மக்கள் விரோதம், மனசாட்சிக்கு விரோதமாகும். சட்டப்பேரவையை, ஜனநாயக அரசை ஆளுநர் அவமதிக்கிறார் என்றே பொருளாகும். மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை விரும்பாமல் ஆளுநர் இப்படி முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறார்.
ஆளுநருக்கு சரியான அறிவுரைகளை வழங்க குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினோம்.பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர். மேலும் ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாகும்.அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருக்க வேண்டும்.
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஆளுநர் ஒரு பாலமாக இருந்து திட்டங்களைப் பெற்றுத் தரலாம். மத்திய அரசுடனான நெருக்கத்தை பயனபடுத்தி தமிழகத்துக்கு தேவையான நிதியை ஆளுநர் பெற்று தரலாம்.ஆனால் ஆளுநர் யாரையாவது அழைத்து வகுப்பு எடுக்கிறார்.அதில் தவறான கருத்துக்களை பேசுகிறார்.
எனது உடல் நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியமானது. தேர்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் நடக்கின்றன. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தலையாய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய அரசுக்கே முன்னோடியாக உள்ளது தமிழ்நாடு. சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால் அது ஜனநாயகத்திற்கு மோசமான நிலையில் கொண்டு செலுத்திவிடும். இத்தகைய சூழல்களை தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன.நிதி நெருக்கடி, மத்திய அரசின் நெருக்கடி இல்லையெணில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். அவசரம், அவசியம் கருதி தமிழ்நாட்டின் நலனுக்காக சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது”என்று பேசினார்.
What's Your Reaction?