நேற்று வந்தே பாரத்.. விரைவில் புல்லட் ரயில்.. வீரம் நிறைந்த மண் இது.. நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ்நாட்டில் இருக்கும் தாய்மார்களும் சகோதரர்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது போல விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்றும் மோடி உறுதி அளித்தார்.

Apr 15, 2024 - 17:49
நேற்று வந்தே பாரத்.. விரைவில் புல்லட் ரயில்.. வீரம் நிறைந்த மண் இது.. நெல்லையில் பிரதமர் மோடி பேச்சு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று பெருமை மிக்க இந்த நெல்லை மாற்றத்தின் குரலாக வருகிறது. உங்களின் உற்சாகத்தை பார்த்தால் திமுக, காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் தூக்கமே தொலைந்து போயிருக்கும். பாஜகவின் தேர்தல் அறிக்கை மோடியின் கியாரண்டி கார்டாகும். 

தமிழ் புத்தாண்டை நீங்கள் கொண்டாடியிருக்கிறீர்கள். அந்த நாளில்தான் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது. அதில் பாஜக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அது மோடியின் கியாரண்டி கார்டு என்று மக்கள் பாராட்டுகின்றனர். மீனவர்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை யோசித்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார் மோடி.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக முக்கிய பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது. நெல்லை சென்னை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. மிக விரைவில் தமிழகத்தின் தென் பகுதிக்கு புல்லட் ரயில் இயக்கப்படும். புதிய அரசு அமைந்த உடன் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மோடி உறுதி அளித்தார்.

தமிழ்நாட்டில் இருக்கும் தாய்மார்களும் சகோதரர்களும் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். பிரதமர் மோடிக்கு எப்படி இந்த ஆதரவு கிடைக்கிறது என்று யோசித்து பல நிபுணர்களும் குழம்பி போயிருக்கின்றனர். பல லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுத்திருக்கிறோம். ஜல் ஜீவன் திட்டம் மூலம் வீடு வீடுக்கு குடிநீர் கொடுத்துள்ளோம். பெண்களுக்கு தேவையான திட்டங்கள் பல நிறைவேற்றியிருப்பதால் அவர்களின் அன்பு எனக்கு கிடைக்கிறது என்று பெருமிதத்துடன் பிரதமர் மோடி கூறினார்.

இங்கு பாரத மாத வேடம் போட்டு ஒரு குழந்தை வந்திருக்கிறது எல்லோரும் கரவொலி எழுப்பி வாழ்த்து கூறுங்கள். தமிழ் மொழியை, தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கிற நீங்கள் பாஜகவை நேசிக்க ஆரம்பித்து விட்டீர்கள். தமிழ்நாட்டிற்கு அனைவரும் சுற்றுலா வரும் வகையில் புராதான சின்னங்களை உலகப்புகழ் பெறச்செய்யும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்வோம். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார் மோடி. 

இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவும் காங்கிரஸ் கட்சியும் வெறுப்பினாலும் எதிர்ப்புனாலும் உருவாக்கப்பட்டது. அவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க நினைக்கின்றனர். செங்கோல், ஜல்லிக்கட்டு என அனைத்தையும் அவர்கள் எதிர்த்தனர் என்று குற்றம் சாட்டினார். வீரமும், தேசப்பற்றும் கொண்ட பகுதி இது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்ட பொம்மன், முத்துராமலிங்கத்தேவர், வீரமங்கை வேலுநாச்சியார், போன்ற விடுதலை போராட்ட வீரர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படைக்கு சென்றவர்கள் இங்கு அதிகம் உள்ளனர் என்று பெருமையுடன் கூறினார்.

எதிரி நாடுகளுக்கு நாம் இன்றைக்கு பதிலடி கொடுத்து வருகிறோம். இந்தியா மீது பற்று வைத்திருக்கும் அனைவருக்கும் பாஜகதான் பிடித்தமான கட்சி. 
பாஜக எப்போதுமே தமிழ் மொழியையும் தமிழ்நாட்டையும் நேசிக்கும் கட்சி. எப்போதும் தமிழக மக்கள் மீது அன்பு வைத்திருக்கும் கட்சி. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களை நினைத்து பார்க்கிறேன். காமராஜர் என்ற நேர்மையான தலைவரை பாஜக பின்பற்றுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி காமராஜரை அவமதிக்கிறது என்று குற்றம் சாட்டினார் மோடி.

எம்ஜிஆரையும் திமுக அவமதிக்கிறது. சகோதரி ஜெயலலிதாவை சட்டசபையில் திமுக நடத்திய விதத்தை நாம் மறக்க முடியாது என்று கூறிய நரேந்திர மோடி உங்களிடம் இருந்து வேறுபட்டவர் அல்ல என்றும் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow