டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்... காரணம் என்ன? 

சுப்கரன் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 

Feb 24, 2024 - 09:25
டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்... காரணம் என்ன? 

பஞ்சாப் போராட்டத்தில் இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த நிலையில், டெல்லி நோக்கி மேற்கொள்ளவிருந்த டெல்லி சலோ போராட்டத்தை பிப்ரவரி 29-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 13-ம் தேதி முதல் மீண்டும் டெல்லி சலோ போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி பஞ்சாப் - டெல்லி எல்லைப் பகுதியான கனூரியில் போராட்டக்காரர்களை விலக்க, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அதில் ரப்பர் குண்டு பட்டு, 21 வயதான இளம் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். இதனால், சுப்கரன் சிங் மரணத்திற்கு நீதி கேட்டு விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். சுப்கரன் சிங்கிற்கு தியாகி அந்தஸ்து, அவரது குடும்பத்திற்கு இழப்பீடு, ஹரியானா காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

இந்த நிலையில், சுப்கரன்சிங் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது தங்கைக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார். இதையடுத்து, ஹரியானா போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள விவசாயிகள், சுப்கரன் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், டெல்லி நோக்கி படையெடுக்கவிருந்த டெல்லி சலோ போராட்டத்தையும் பிப்ரவரி 29-ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர். தற்போதைய கவனம் முழுவதும் சுப்கரன் சிங்கிற்கு நீதி பெற்றுத் தருவதில் இருப்பதால், ஆலோசனைகளுக்குப் பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 




What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow