5 பேர் உயிரிழப்பு... அமைச்சர் கொடுத்த பதில்...!

சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். 

Oct 7, 2024 - 12:17
5 பேர் உயிரிழப்பு... அமைச்சர் கொடுத்த பதில்...!

சென்னை நுங்கம்பாக்கம்  லயோலா கல்லூரியில் பருவமழை ஆரோக்கியம் மற்றும் தயார் நிலை குறித்தான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், விமான சாகச நிகழ்ச்சி முடிந்த பிறகு நிகழ்ந்த 5 பேர் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார். அதாவது, ”விமான சாகச நிகழ்ச்சியின் போது 40 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தது. மேலும் ஆயிரம் பாரா மெடிக்கல் குழுவினர் சுகாதார பணிக்காக தயார் நிலையில் இருந்தனர். 4000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மருத்துவப் பணிக்காக தயார் நிலையில் இருந்தனர்.

நேற்று வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக இருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் குடை, குடிநீர் ஆகியவற்றுடன் தயார் நிலையில் வர வேண்டும் என்று விமானப்படை அறிவுறுத்தி இருந்தது. கூட்ட நெரிசலில் ஏற்பட்ட 5 பேர்களின் மரணம் மிகவும் வருத்ததிற்க்குறிய ஒன்று. வெயிலின் தாக்கத்தால் அவர்கள் இறந்ததற்குப் பிறகே மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், “விமானப்படையின் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் 5 பேரும் மரணித்துள்ளனர். தற்பொழுது ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சாகச நிகழ்ச்சிகளையும் தாண்டி விமானப்படையின் பெரிய கட்டமைப்பை மக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்று விரும்பித்தான் அங்கு வந்துள்ளனர். பூதக்கண்ணாடி போட்டு குற்றம் கண்டுபிடிக்க கூடிய நக்கீரர்கள் ஒன்று இரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். விமான சாகச நிகழ்சியில் ஏற்பட்ட மரணத்தை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். மக்களுக்கு தேவையான குடிநீர் தொட்டிகள் தேவையான அளவிற்கு வைக்கப்பட்டிருந்தது. 7500 காவல்துறையினர் மேலும் ஊர் காவல் படையினர் அனைத்து இடத்திலும் இருந்தனர்” என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow