கண்ணை மறைத்த ஆத்திரம்... சம்பவத்தை மூடிமறைத்த குடும்பத்தினர்... போலீசில் போட்டுக்கொடுத்த ஊர்மக்கள்...
ஜோலார்பேட்டை அருகே தாயை மதுபோதையில் அடித்த அண்ணனை, தம்பி கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலோரி முத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு மலர் என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் சந்தோஷ்(30), சஞ்சய்(24) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
சந்தோஷ் கடந்த 17-04-2024-ம் தேதியன்று இரவு, அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், மதுபோதையில் அவரது தாய் மற்றும் சகோதரியை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிகிறது. இதைக்கண்ட தம்பி சஞ்சய், சந்தோஷை தடுத்துள்ளார். இருப்பினும் சந்தோஷ் தாயை மேலும், மேலும் தாக்க ஆத்திரமடைந்த சஞ்சய் அருகில் இருந்த கல்லை எடுத்து சந்தோஷின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.
படுகாயமடைந்த சந்தோஷை குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகவும் மருத்துவர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து சந்தோஷை பரிசோதித்த மருத்துவர்கள், தலையில் பலத்த காயமடைந்துள்ளதால் அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி கடந்த 18-04-2024-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர், சந்தோஷ் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கீழே விழவில்லை. சஞ்சய் கல்லால் தாக்கியதால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சஞ்சயை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனது தாயையும், அக்காவையும் அடித்ததன் காரணமாக கல்லால் தாக்கியதாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து சஞ்சய் மீது வழக்குப்பதிவு செய்த ஜோலார்பேட்டை காவல்துறையினர். அவரை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?