மதுபான விடுதி விபத்துக்கு நாங்க காரணமல்ல… திட்டவட்டமாக மறுத்த மெட்ரோ நிர்வாகம்…
விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் எந்த அதிர்வும் கண்டறியப்படவில்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

ஆழ்வார்பேட்டை தனியார் மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் காரணமில்லை என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் சேக்மேட் (Sekhmet Club) என்ற தனியார் மதுபான விடுதியின் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்கு மதுபான விடுதிக்கு அருகே நடைபெற்று வரும் மெட்ரோ சுரங்கப்பாதை பணிகள் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அதனை மெட்ரோ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மெட்ரோ நிர்வாகம், விபத்து நடந்த இடத்திலிருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விபத்துக்கு மெட்ரோ பணிகள் காரணமல்ல என்று கூறியுள்ள மெட்ரோ நிர்வாகம், விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் எந்த அதிர்வும் கண்டறியப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மெட்ரோ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினருக்கு உதவி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






