100வது போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ரியான் பராக்... டெல்லியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!

மிக இளம் வயதில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றிருக்கிறார்.

Mar 29, 2024 - 02:18
100வது போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய ரியான் பராக்... டெல்லியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!

ஐபிஎல் தொடரின் 9வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 


கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டியில் டெல்லியை எதிர்கொண்டது. மறுமுனையில் டெல்லி முதல்  போட்டியில் தோல்வியடைந்த நிலையில், கம்பேக் கொடுக்கும் நோக்கில் 2வது போட்டியில் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 


இதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஓபனர்கள் கடந்த போட்டியை போலவே அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். இதில் ஜெஸ்வால் 5 ரன்னுக்கும், ஜாஸ் பட்லர் 11 ரன்னுக்கும் அவுட் ஆகினர். 


இதைதொடர்ந்து தனது 100வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய ரியான் பராக், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 6 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளையும் விளாசி 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போதும், 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை அணி எட்டியது. டெல்லி அணி சார்பாக பந்துவீசிய 5 பேரும் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். 


இந்நிலையில், 186 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர், டேவிட் வார்னர் சிறப்பான ஓபனிங்கை கொடுத்தார். எனினும் நூலிழையில் அரைசத்தை நழுவவிட்டு 49 ரன்களில் அவுட்டானார். அதைதொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2வது வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் புள்ளிப் பட்டியளிலும் 2ஆம் இடத்திற்கு முன்னேறியது. 

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய ரியான் பராக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த போட்டியின் மூலம் மிக இளம் வயதில் 100 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை ரியான் பராக் பெற்றிருக்கிறார். அத்துடன் இவர் சக ராஜஸ்தான் அணி வீரரும் கேப்டனுமான சஞ்சு சாம்சனின் சாதனையை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow