இலங்கைக்கு போகும் பிரதமர்.. கச்சத்தீவு விவகாரத்தில் புது ஐடியா தரும் தவெக தலைவர் விஜய்

”கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

Apr 4, 2025 - 17:54
இலங்கைக்கு போகும் பிரதமர்.. கச்சத்தீவு விவகாரத்தில் புது ஐடியா தரும் தவெக தலைவர் விஜய்
vijay thought about katchatheevu issue

3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-

”கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.

மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.

அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை. அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.

இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு  எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.

இடைக்காலத் தீர்வாக 99 வருட குத்தகை:

கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். 

மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு.மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.

போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வலியுறுத்துகிறேன். சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்” என தவெக தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: ‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow