அதிமுக, பாஜக சதியை முறியடிப்போம்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 

நமக்கு எதிரான அதிமுக, பாஜக சதியை முறியடிக்க அண்ணா நினைவுநாளில் உறுதி ஏற்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுக, பாஜக சதியை முறியடிப்போம்: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 
அதிமுக, பாஜக சதியை முறியடிப்போம், ஸ்டாலின்

பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்: திமுகவை  6-ஆவது முறையாக அரியணை எற்றியதில் உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். 

பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. மத்திய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.

உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், இனமானப் பேராசிரியர் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகளும்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. 

பேரறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தமிழ்நாட்டில் அரியணையில் ஏற்றியது என்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம். 1967-இல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.

இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க.. 

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.  மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மத்திய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க. 

மக்களிடம் செல் என்று பேரறிஞர் அண்ணா சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது, ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது. 

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும்  நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம். 

என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். 

அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்.  இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow