விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு! திருமாவுக்கு நிம்மதி பெருமூச்சு...
பானை சின்னம் கோரி திருமாவளவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது!
நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் ரவிக்குமார் ஆகியோருக்கு பானை சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளை ஒதுக்கி, திமுக தலைமை அறிவித்துள்ளது.
இதையடுத்து சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ஆனால், இந்த இரு தொகுதிகளில் போட்டியிடும் விசிகவுக்கு சின்னத்தை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதைக் குறிப்பிட்டு திருமாவளவன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்தது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவிருந்தது.
மறுமுனையில், பானை சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரிய விசிக தலைவர் திருமாவளவன், அச்சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், விசிகவுக்கு தற்போது பானை சின்னத்தையே ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் திமுக மற்றும் விசிகவினர் மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிப்பைத் தொடர்ந்து வருகின்றனர்.
What's Your Reaction?