Weather Update: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நாளை (செப்.23) 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sep 22, 2026 - 16:32
Weather Update: கொட்டி தீர்க்கப்போகும் மழை..  வானிலை மையம் எச்சரிக்கை!
Weather Update

சென்னை, செங்கல்பட்டு உள்பட 5 மாவட்டங்களில் நாளை (செப்.23) இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், நேற்று மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மணி அளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடைந்து, இன்று (செப்.22) காலை 8:30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்தியமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை 24 ஆம் தேதி காலையில் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையில் கரையை கடக்கக்கூடும்.

மிதமான மழை 

இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை (செப்.23): மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow