வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 4

வாழ்க்கையைப் பற்றி மனதை ஒருநிலைப்படுத்தி வெற்றி பெற்ற நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்" என்பார்.

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 4
வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 4

வாழ்க்கை என்றால் என்ன நண்பர்களே? - 4

- மதுகேசவ் பொற்கண்ணன் 

கண்ணதாசன் ஒரு பாடலில், " மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்; ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும்" - என்று எழுதுகிறார். எப்படி இது சாத்தியமாகும்? வாலி ஒரு பாடலில் பதில் சொல்கிறார். கேள்வி கேட்பது போல பதிலைத் தருகிற பாடல் அது.

"கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா ? மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? இரண்டு பாடல் வரிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. வாலியின் கேள்வி நிறைந்த பாடலுக்கு கண்ணதாசன் பாடல் பதில் தருவதாகக் கூட பொருத்திப் பார்க்கலாம்.

இரண்டு பாடல்களும் நம்மை நல்வழியில் நடக்கச் சொல்லி வற்புறுத்துகின்றன-  இனிமையாக; இசையாக; இசைவாக; அமைதியாக; அழகாக; ஆரவாரம் இல்லாத இசையுடன் கூடிய அந்த இரு பாடல்களும், நமக்கு ஆயிரம் ஆயிரம் சேதிகள் கூறுகின்றன. இன்று இரு கவிஞர்களுமே நம்முடன் இல்லை.ஆனால், அவர்கள் எழுதிய எழுத்துக்கள் நம்முடன் உரையாடுகின்றன, கேள்வி கேட்கின்றன, பதில் சொல்லுகின்றன, கேலி பேசுகின்றன, வாழ்க்கையைச் சொல்லுகின்றன, வழிகாட்டு கின்றன, நன்றாக வாழச் சொல்லு கின்றன; அதனால்தான் கண்ணதாசன் கூறுகிறார் "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை "-என்று.

எந்த சபைதனிலும் மரியாதை பெற வேண்டுமா? எப்படி? எப்போது ? அது தானாகக் கிடைக்கும். ஒரு மாற்று குறையாத மனிதன் என்று பெயரெடுக்க வேண்டும். அவ்வளவுதான். நற்பெயர் எடுக்க காலங்கள் போதாது. பிறந்தது முதல் இறப்பது வரை காலம் தேவைப்படும். ஆனால் ஒரு கெட்ட பெயர் எடுக்க அரை நொடி போதும் மனிதனுக்கு.

திருவருட்பா எழுதியது தவறு என்று அருட்பிரகாச வள்ளலார் மீது யாழ்ப்பாண புலவர் ஒருவர் வழக்கு தொடுக்கிறார். அருட்பாவுக்கு மாற்றாக மருட்பா எழுதுகிறார். அதுவே சிறந்தது என்று வாதிடுகிறார். வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. வள்ளலார் வந்தவுடன் மொத்த நீதிமன்றமும் எழுந்து நிற்கிறது. வழக்கு தொடுத்தவரும் எழுந்து நிற்கிறார். இதனைக் கவனித்துவிட்ட  நீதிபதி,  அவரிடம் உனது எதிர்வாதி வரும் பொழுது நீரும் ஏன் எழுந்தீர்? என்று கேட்கிறார். அதற்கு அவர், வள்ளலாரைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் எழுந்து விட்டேன் நீதிபதி அவர்களே!  என்று கூறுகிறார்.  நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். ஒரு வழக்கில் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு வருகையின் ஒளியால் வழக்கே தள்ளுபடி ஆகிறது என்றால் வள்ளலாரின் தன்மை அப்படி! ஒரு மாற்று கூட குறையாத மன்னவர் அல்லவா அவர்!! அதனால்தான் அவரை இன்றும் போற்றிப் புகழ்கின்றனர்.

திருவொற்றியூரில் ஒரு திண்ணையில் ஒரு சித்தர் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோர் எல்லாரையும்  பார்த்துவிட்டு இதோ நாய் போகிறது; நரி போகிறது; புலி போகிறது; சிங்கம் போகிறது; கழுதை போகிறது; காக்கா போகிறது;  என்றெல்லாம் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பெயரை ஒரு விலங்கின் பெயரைக் கூறிகொண்டே இருப்பாராம். ஆனால் ஒரு சமயம் வள்ளலார் அந்த வழியே செல்லும் பொழுது மட்டும் இதோ ஒரு மனிதன் செல்கிறார் என்று அந்த சித்தர் கூறி இருக்கின்றார். இதைத்தான் வாலியும் சொல்லுகின்றார், "மனிதன் நடந்த பாதையில் நாமும் செல்ல வேண்டுமென்று.".

எப்படி மாற்று குறையாத மனிதராக முடியும்? கண் பார்த்த இடமெல்லாம் கால் போய்க்கொண்டிருந்தால், ஊருக்கு போய்ச் சேர முடியுமா? சேரும் இடம் அறிந்து பயணித்தால் தான் கண் சரியான பாதையைப் பார்க்கும், இலக்கை சென்று அடைய முடியும். வாழ்க்கையில் ஒரு இலக்கு இருக்க வேண்டும். கட்டுப்பாடற்ற மனநிலையைத்தான் வாலி உருவகமாகக் கூறுகின்றார். மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்று.

மனதைக் கட்டுப்படுத்துவது எது? நண்பர்களே, மனிதன் போன பாதை எது? உருவத்தை வைத்து கூறும் மனிதர்களை அவர் கூறவில்லை. புத்தன் இயேசு காந்தி நபிகள் வள்ளலார்  போன்ற சித்தர்கள் பலரும் காட்டியுள்ள நல்வழிகளில் செல்ல வேண்டும், என்பதைத்தான் மனிதன் போன பாதை என்கிறார் வாலி. பிறந்தது முதல் மனம் எல்லாவற்றையும் பார்க்கிறது, அனுபவிக்கிறது, ஆனாலும் எந்த பாடமும் கற்றபாடில்லை. கட்டுப்பாடற்ற மனம், மேலும் மேலும் தவறை செய்து கொண்டே இருக்கிறது. தவறான பாதைக்கு மனிதனை அழைத்துச் சென்று விடுகிறது. பின்னர் வருந்தி ஏதும் பயனில்லை. மனதின் ஓட்டத்தை கவனியுங்கள் மனம் தானாக அடங்கி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும். அதனை உடற்பயிற்சி என்றும் சொல்லலாம்,

யோகம்,தியானம்,இசை, நடனம், போன்றவற்றில் மனம் ஒருநிலைப் படும். வாசிப்பதில் லயித்தால் மனம் ஒருமைப்படும். அதுபோலவே மனத்தின் குரலை கேட்டால் மனதோடு லயித்து விட்டால் உங்கள் மனமும் ஒருமைப் பட்டுவிடும். அதற்கு ஒவ்வொரு நாளும் ஒரு 15 நிமிடமாவது உங்கள் மனதின் ஓட்டத்தைக் கவனியுங்கள். இடையில் நீங்கள் ஏதும் குறிக்கிடாமல், இது தவறு, இது சரி என்று குறிக்கிடாமல் கவனித்து வாருங்கள். முதலில் தேவையற்ற எண்ணங்கள் மேல் எழும்பி வரும்; அவற்றைக் கவனித்தால் மட்டும் போதும்,  பின் அது நல்ல எண்ணங்களுக்கு வழி விட்டு விலகிவிடும். இது ஒரு தொடர் பயிற்சி மூலம் மட்டுமே உங்களுக்குக் கைகூடும். அவசரம் இல்லாமல் ஒரு 21 நாட்கள் மனதுடன் பேசுங்கள். அது பேசுவதைக் கேட்டுக் கொண்டிருங்கள். உங்கள் முழு மனதும் உங்கள் வசப்படும். உங்களின் எந்த செயலும் ஒரு ஒழுங்குக்குள் வந்துவிடும். படிப்பாக இருக்கலாம், வேலையாக இருக்கலாம், கலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம், கணினி செல்பேசி உபயோகிப்பதால் ஏற்படும் அயற்சியாக இருக்கலாம்.

வாழ்வின் எல்லா நிலைகளிலும் மனம் உங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும். என்ன ஒன்று? - மனம் வழிகாட்டுவதை நீங்கள் உணர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?  மீண்டும் "மனிதன் போன பாதையை மறந்து போகலாமா" என்ற வரிகளில் இருந்து துவங்குங்கள். இது ஒரு சுற்று ஓட்ட தொடர் முயற்சி. விடாமுயற்சி தான் வெற்றி தரும்.

ஒரு விளையாட்டில் இறுதி வெற்றியை பெறுபவர் யார் தெரியுமா? ஆட்டத்தின் அத்தனை நுணுக்கங்களும் தெரிந்திருந்தும் அனைத்து திறமைகளும் இருந்தும் மனோபலம் இல்லாவிட்டால் அவ் விளையாட்டில் மனோபலம் உள்ள சாதாரண வீரனிடம் கூட தோற்கும் நிலை ஏற்பட்டு விடும். உதாரணமாக, கிரிக்கெட்டின் T20 விளையாட்டைக் கூறலாம். T20 கடைசி ஓவர் விளையாடும் போது பவுலரும் சரி, பேட்ஸ்மேனும் சரி, யாரிடம் மனோ தைரியமும் மன ஒருமையும் இருக்கிறதோ அவர்தான் வெல்வார். பவுலரிடம் மனோதிடம் இருந்தால், பேட்ஸ்மேனை அவுட் ஆக்கி விடுவார். பேட்ஸ்மேனிடம்  மனோபலம் இருந்தால் பௌலரைப் பதம் பார்த்து வெற்றி பெறுவார். சமீபகால உதாரணமாக,  மகேந்திர சிங் தோனியைக்  குறிப்பிடலாம். மிஸ்டர் கூல் என்று புகழப்படுபவர். அவரிடமிருந்த அந்த மனோதிடம் தான் இந்தியாவை உலக அரங்கில் புகழ் பெறச்செய்தது. தற்போது பொதுவாக எல்லா வீரர்களும் இதனைப் பின்பற்ற ஆரம்பித்து பிரகாசித்து வருகின்றனர்.

நீங்களும் தயாராகுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் சிறுவயது முதலே பழகிக் கொடுங்கள். மன ஒருமைப்பாட்டு தியானத்தைப் பழகுங்கள். மாபெரும் சபைதனில் நடந்து பாருங்கள். உங்களின் வெற்றியின் அளவு புரியும். வெற்றி பெற்றவர் பின்னால் ஓடுவதை நிறுத்துங்கள்;  நீங்கள் முதலில் வெற்றி பெறுங்கள்;  காலம் உங்களைக் கொண்டாடட்டும்!

வாழ்க்கையைப் பற்றி மனதை ஒருநிலைப்படுத்தி வெற்றி பெற்ற நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள் "லைஃப் இஸ் பியூட்டிஃபுல்" என்பார். 

அதை நீங்களும் சொல்ல வேண்டாமா? மனிதன் போன பாதையில் செல்லுங்கள்.

மதுகேசவ் பொற்கண்ணன் 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow