திருமணம் செய்ததால் பணிநீக்கம்; செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு - தீர்ப்பின் பின்னணி...

Feb 21, 2024 - 15:30
திருமணம் செய்ததால் பணிநீக்கம்; செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு - தீர்ப்பின் பின்னணி...

திருமணமான காரணத்தைக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ செவிலியருக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அரசியலமைப்பு ரீதியாக எந்தவொரு பாலின பாகுபாட்டையும் அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

1988-ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்த செலினா ஜான் என்பவருக்கு லெப்டினன்ட் பதவிக்கான கமிஷன் வழங்கப்பட்டது. தொடர்ந்து அதே ஆண்டில் திருமணம் செய்து கொண்டதை காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து, கடந்த 2012ம் ஆண்டு ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் அவர் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது திருமணமாகி விட்டது என்பதை காரணம் காட்டி பெண்ணின் வேலைவாய்ப்பைப் பறிப்பது பாலினக் பாகுபாடு, சமத்துவமின்மையை மீறும் செயல் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். அரசியலமைப்பு ரீதியாக எந்தவொரு பாலின பாகுபாட்டையும் அனுமதிக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது. மனுதாரர் மீது திணிக்கப்பட்ட ஆணாதிக்க நடைமுறை என்பது மனித கண்ணியம், உரிமை, நியாயமான நடைமுறைகளை கேள்விக்கு உட்படுத்துகிறது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தொடர்ந்து ராணுவ செவிலியரான மீண்டும் பணியைத் தொடர உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. எட்டு வாரங்களுக்குள் பணம் செலுத்தப்படாவிட்டால், மேல்முறையீடு செய்யப்படும் போது இந்த உத்தரவின் தேதியிலிருந்து பணம் செலுத்தப்படும் தேதி வரை ஆண்டுக்கு 12 சதவீத வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow