பாலியல் புகார் எதிரொலி: தலைமறைவாகிய வேடனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராப் பாடகர் வேடனின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடன் தலைமறைவாகினார். இந்நிலையில், நாட்டை விட்டு வேடன் தப்பிக்கக்கூடும் என்பதால் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகார் எதிரொலி: தலைமறைவாகிய வேடனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்!
lookout notice issued against kerala rapper vedan amid sexual assault case

கேரளாவில் ராப் இசையால் இளைஞர்களைத் தன்வசம் ஈர்த்து வந்த பிரபல இசை கலைஞரான வேடன் (ஹிரந்தாஸ் முரளி) மீது பாலியல் வழக்கு கடந்த ஜூலை 30 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் மாவட்டத்திற்குட்பட்ட திருக்காக்கரை போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

யார் இந்த வேடன்?

வேடன் என அறியப்படும் ஹிரந்தாஸ் முரளியின் தந்தை கேரளாவை சேர்ந்தவர். தாய் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், யூடியூபில் வெளியான இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் பரவலான கவனம் பெற்றார். "நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் அழுத்தமாகப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து, 'மஞ்சும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற சில படங்களிலும் இவர் பாடல்களைப் பாடியுள்ளார். 

சமீபத்தில் மலையாள திரையுலகில் ஹிட்டடித்த டோவினோ தாமஸ், சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' படத்திலும் பழங்குடியினரின் போராட்டம் பற்றி 'வாடா வேடா' என்ற பாடலை எழுதிப் பாடவும் செய்திருந்தார் வேடன்.

தனது ராப் இசைப் பாடல்களை இவரே எழுதி பல மேடைகளில் பாடி, கேரளாவில் மட்டுமின்றி தென் இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களை வசீகரித்து வந்தார். இந்நிலையில், இவர் மீது திருக்காக்கரை போலீசார் பாலியல் வழக்குப் பதிவு செய்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை புகார் விவரம்:

கோட்டயம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், வேடன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துப் பலமுறை உடலுறவு மேற்கொண்டதாக கூறியுள்ளார். ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2023 வரை வேடன் தன்னுடன் உறவு வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திருமண ஆசைக்காட்டி பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வேடன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) (n) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திய பின் வேடன் திருமணம் செய்ய மறுத்ததாகவும், அதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், சமூகத்தின் முன்னால் அவமானம் ஏற்படும் என அஞ்சியதால் முன்னதாகப் புகார் அளிக்கவில்லை என்றும் அந்தப் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தலைமறைவாகிய வேடன்: லுக் அவுட் நோட்டீஸ்

வழக்குப் பதிவுக்குப் பிறகு, வேடன் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தார், அது ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வேடனும் தலைமறைவாகினார். கடந்த சனிக்கிழமை, கொச்சியில் இசை கச்சேரியில் வேடன் பங்கேற்பதாக இருந்தது. நிகழ்ச்சிக்கு சென்றால் போலீசார் கைது செய்வார்கள் என வேடன் கருதிய நிலையில், நிகழ்வில் பங்கேற்கவில்லை. இசை நிகழ்ச்சியும் வேறு காரணங்களை குறிப்பிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே வேடன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லக்கூடும் என போலீசார் தரப்பு கருதுவதால், வேடனுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எக்காரணத்தை கொண்டும் குற்றம்சாட்டப்பட்ட நபர் விசாரணையிலிருந்து தப்பித்து விடக்கூடாது என்பதால் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow