ஜக்கம்மாவாக வந்த திமுக நிர்வாகி... விபூதி அடித்து அனுப்பிய பெண்கள்!

Feb 21, 2024 - 15:39
Feb 21, 2024 - 16:43
ஜக்கம்மாவாக வந்த திமுக நிர்வாகி... விபூதி அடித்து அனுப்பிய பெண்கள்!

ஜக்கம்மாவாக மாறி பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகியை சூழ்ந்து பெண்கள் சிலர் சராமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளது. அதனை எதிர்கொள்ள கட்சி தலைமை கூட்டணி, தேர்தல் அறிக்கை என ஒரு பக்கம் பணிகளில் ஈடுபட கட்சி நிர்வாகிகள் நேரடியாக மக்களை சென்று சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை கவர கலைஞர், எம்.ஜி.ஆர் போன்று வேடமணிந்து செல்வது, பரோட்டா வீசுவது பல யுக்திகளை கையாளுவார்கள். அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் திமுக சார்பில் தலைமைக் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்புக்காரன் வேஷம் போட்டு வீதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மோடி அரசால், பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் படும் அவதி குறித்து குடுகுடுப்பை அடித்து மக்களிடம் எடுத்து கூறினார்.

ஆனால், ஜக்கம்மாவின் ஜோதிடம் பலிக்காததோடு, அங்கிருந்த பெண்கள் ஜக்கம்மாவுக்கே விபூதி அடிக்க தொடங்கினர். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என கூறினீர்கள், முதலில் அதை மூடுங்கள் அதன் பிறகு ஓட்டுப்போடுகிறோம் என கூறினார்கள்.

அதோடு, ஓட்டல், கட்டட வேலை என எல்லா இடத்திலும் வடமாநிலத்தவரே வேலை செய்கின்றனர். எங்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது என சிலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அப்போது ஒரு பெண், ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, அரிசி, காய்கறி என எல்லா பொருட்களின் விலையும் ஏறிவிட்டது என அடுக்கடுக்காக குறைகளை அடுக்கினர்.

அவர்களிடம் ஜக்கம்மாவாக வந்த கோவிந்தன் மத்திய அரசு தான் எல்லாவற்றிற்கும் காரணம் என கூற முயற்சித்தும் அந்த பெண்கள் அதனை காதுகொடுத்து கேட்க மறுத்துவிட்டனர். அப்போது அங்கு இருந்த திமுக நிர்வாகி ஒருவர் டைம் ஆச்சு, அடுத்து ஏரியாவுக்கு  கிளம்பலாம் என கூறி ஜக்கம்மாவுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow