"உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்".. தலைவர்கள், பிரபலங்கள் உழைப்பாளர் தின வாழ்த்து !

மே 1 ஒன்று உலக உழைப்பாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, பாமக நிறுவனர் ராமதாஸ், ம.நீ.ம தலைவர் கமலஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

May 1, 2024 - 11:34
May 1, 2024 - 11:37
"உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்".. தலைவர்கள், பிரபலங்கள் உழைப்பாளர் தின வாழ்த்து !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குருதியை வியர்வையாக்கி உழைப்பால் உலகை உயர்த்தும் அனைத்து உழைப்பாளர்களையும் #LabourDay-இல் வாழ்த்திப் போற்றுவோம் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மேதினியில் வாழும் உழைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க -  ஒற்றுமையை உண்டாக்க மே நாளில் உறுதியேற்போம்! உழைக்கும் கைகள் ஒன்று சேர்ந்து புதிய உலகம் படைப்போம் எனவும் பதிவிட்டுள்ளார். 


 
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகிற்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தின திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, உழைப்பில் உயர்வு, தாழ்வில்லை, உழைப்புக்கு ஜாதி, மதமோ, ஆண் பெண் பேதமோ இல்லை... உழைக்கும் உள்ளங்கள், அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்காது. மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனின் வாழ்த்துச்செய்தியில், உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது, உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது, உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று என்று குறிப்பிட்ட அவர், உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம் எனவும் கூறியுள்ளார்.

ஒருபக்கம் வைரமுத்து, இளையராஜா இடையிலான வார்த்தை யுத்தம் உச்சம் பெற்றுள்ள நிலையில், இளையராஜாவின் பாடலை பதிவிட்டு மே தினத்திற்கு வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow