கோடியக்கரை சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப் பறவைகள்
வேதாரண்யம் அருகே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டுப்பறவைகளைக் காண பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை தருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பிரசித்தி பெற்ற கோடியக்கரை வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவு வாயில் எனப்படும் இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழைக்காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, அண்டார்ட்டிகா, நேபாளம், சீனா, திபெத் மற்றும் இமயமலைப்பகுதிகளிலிருந்து உணவுக்காக லட்சக்கணக்கான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் மட்டுமே வாழும் அரியவகை கிர்பின் கழுகுகளும் கோடியக்கரைக்கு வந்து செல்வது கடந்த ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சரணாலயத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆண்டுதோறும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப்பறவைகள் சுமார் 13,000 கி.மீ தூரம் ‘நான் ஸ்டாப்பாக’ பறந்து கோடியக்கரைக்கு வந்து செல்வதும் தெரிய வந்தது.
இது குறித்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான். “தற்போது வடகிழக்கு பருவமழை பெய்துவருவதால் சரணாலய பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைக்கிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரித்தலை வாத்து உள்ளிட்ட 65 வகையான பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளது.
இங்கு பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு அதிக அளவில் பறவைகள் வருகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரணாலயத்தில் இரட்டைத்தீவு, கோவைத்தீவு, நெடுந்தீவு, பம்ப் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்டுகளிக்கின்றனர்.” என்றார்.
-ஆர்.விவேக் ஆனந்தன்
What's Your Reaction?