பரபரப்பாகும் தேர்தல் களம்! டெல்லியில் இன்று பிரசாரம் தொடங்கும் ஆம் ஆத்மி...

தொகுதிப் பங்கீடுகள் இறுதியான நிலையில் தேர்தல் பணிகளில் கட்சி மும்முரம்

Mar 8, 2024 - 11:55
பரபரப்பாகும் தேர்தல் களம்! டெல்லியில் இன்று பிரசாரம் தொடங்கும் ஆம் ஆத்மி...

காங்கிரஸ் உடனான I.N.D.I.A கூட்டணியில் டெல்லி நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பங்கீடு இறுதியான நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி  தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்கவுள்ளது. 

நாடாளுமன்றம் தேதி அறிவிப்புக்காக நாடே ஒருபுறம் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்துகொண்டு அடுத்தகட்டத்திற்கு தயாராகி வருகின்றன. பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கிக் களம் காண்கிறது. 

இதில், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் உள்ள நிலையில், டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீடு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே இறுதியாகியுள்ளது. அதன்படி புதுடெல்லி, டெல்லி மேற்கு, டெல்லி தெற்கு மற்றும் டெல்லி கிழக்கு ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், சாந்தினி சவுக், டெல்லி வடகிழக்கு, டெல்லி வடமேற்கு  ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. 

இதேபோல் ஹரியானா, குஜராத், சண்டிகர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிடுகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இப்படி நாடாளுமன்ற தேர்தலுக்காக முழு வீச்சில் ஆம் ஆத்மி தயாராகி வரும் நிலையில் இன்று (மார்ச் 8) முதல் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப்பில் அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோரின் தலைமையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow