சிவாஜி வீடு ஜப்தி: அண்ணன் ராம் குமாருக்கு உதவ முடியாது..! நடிகர் பிரபு திட்டவட்டம்
சிவாஜி கணேசன் வீடு ஜப்தி தொடர்பான வழக்கில் அண்ணன் ராம் குமார் பல பேரிடம் கடன் பெற்றுள்ளதால் அவருக்கு உதவ முடியாது என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தனர்.
பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, 'ஜகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024-ம் ஆண்டு மே 4-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமென வாதிட்டார். தனது சகோதரர் ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை எனவும் நடிகர் பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே?என யோசனை தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், இது போன்று அவருக்கு உதவ முடியாது என்றும் நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?






