செங்கோட்டையன் அதிமுக கழக பொதுச்செயலாளரா? போஸ்டரால் பரபரப்பு
மதுரையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக கழக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை நகரின் பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு Y+ செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என அஇஅதிமுக மதுரை மாநகர் மாவட்ட மத்திய தொகுதி செயலாளர் ஜி.எஸ்.செந்தில்நாதன் என்பவரின் பெயரில் போஸ்டர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுகவில் சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், கடந்த வாரம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.
மௌனமாக இருப்பது நன்மையே:
எடப்பாடி பழனிச்சாமியினை தொடர்ந்து, மதுரையில் இருந்து டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் தனியாக சந்தித்தது அதிமுக கட்சிக்குள் புகைச்சலை உண்டாக்கியது. சந்திப்பு குறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தார் செங்கோட்டையன். இதுக்குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”மௌனமாக இருப்பது நன்மைக்கே” எனக்கூறி நடையை கட்டினார்.
செங்கோட்டையனின் நடவடிக்கைகள் இன்று வரை அதிமுக தொண்டர்கள் மற்றும் முன்னணி கட்சி பிரதிநிதிகளுக்கே புரியாத புதிராக தான் உள்ளது. இந்த நிலையில் அதிமுக கழக பொதுசெயலாளர் செங்கோட்டையன் என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்த போஸ்டரில் S.P.வேலுமணி, தங்கமணி, ராஜன் செல்லப்பா உருவப்படமும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், அண்ணா ஆகியோரது உருவப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more: ‘கொங்கு மண்டலம் வீக்’.. சர்வே கொடுத்த ஷாக்: களமிறங்கும் முக்கியப் புள்ளி!
What's Your Reaction?






