Kottukkaali Trailer: “பேய் பிடிச்சிருக்கு..” சூரி நடிப்பில் மிரட்டும் கொட்டுக்காளி ட்ரெய்லர்!
சூரி நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம், வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சென்னை: பல படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக முகம் காட்டிய சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா காமெடி மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்த சூரி, தற்போது ஹீரோ மெட்டீரியலாக மாஸ் காட்டி வருகிறார். வெற்றிமாறனின் விடுதலை, துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் திரைப்படங்கள், சூரிக்கு ஹீரோவாக நல்ல அறிமுகம் கொடுத்தன. இந்த இரண்டு படங்களிலும் சூரியின் நடிப்புக்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்தன.
இந்த வரிசையில் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி வரும் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. கூழாங்கல் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த பிஎஸ் வினோத்ராஜ், கொட்டுக்காளி படத்தையும் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். ரிலீஸுக்கு முன்பே பெர்லின் உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது கொட்டுக்காளி.
இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லரை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2.08 நிமிடங்கள் ஓடும் இந்த ட்ரெய்லரில் வசனங்கள் குறைவாக உள்ளன. “எங்க வீட்டு பிள்ளைக்கு பேய் பிடிச்சிருக்கு” என்ற சூரியின் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், கொட்டுக்காளி ட்ரெய்லரில் ரசிகர்களுக்கு விஷுவலாக கதை சொல்கிறார் இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ்.
கொட்டுக்காளி குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம் என இயக்குநர் லெனின் பாரதி பாராட்டியிருந்தார். அதேபோல், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் உள்ளிட்ட மேலும் பல திரை பிரபலங்களும் பாராட்டியிருந்தனர். இந்த பாராட்டுகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் வெளியாகியுள்ளது கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர்.
முக்கியமாக கொடுக்காளி ட்ரெய்லரில் சூரியின் நடிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விடுதலை, கருடன் படங்களை விடவும் கொட்டுக்காளியில் சூரி தரமாக ஸ்கோர் செய்திருப்பார் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல் அன்னா பென் நடிப்பும் எதிர்பார்க்க வைத்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் கொட்டுக்காளி இந்தாண்டின் சிறந்த கல்ட் கிளாஸிக் திரைப்படமாக இருக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
What's Your Reaction?