வெளிநாட்டில் தென் இந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!

''தென் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருவதற்கு தரமான இளம் இயக்குநர்கள் உருவாகி வருவதே காரணம்'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Aug 13, 2024 - 11:38
Aug 13, 2024 - 11:45
வெளிநாட்டில் தென் இந்திய சினிமாவை புகழ்ந்து தள்ளிய ஷாருக்கான்.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி!
Shahrukhkhan

பெர்ன்: இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஷாருக்கான். பாலிவுட்டில் பல்வேறு இளம் நடிகர்கள் காலடி எடுத்து வைத்தாலும், ஷாருக்கான் தொடர்ந்து அசைக்க முடியாத நடிகராக வலம் வருகிறார். ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான 'பதான்', 'ஜவான்' ஆகிய 2 திரைப்படங்களும் வசூலில் சக்கைபோடு போட்டன. 

இந்த இரண்டு படங்களுமே ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தில் உள்ள லோகார்னோவில் நடைபெற்ற 77வது லோகார்னோ திரைப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், 2002ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டது.

இந்த விழாவைத் தொடர்ந்து ஷாருக்கானிடம் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது தென் இந்தியா சினிமா குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த ஷாருக்கான், ''சினிமா ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், தென்னிந்திய சினிமா மிகவும் அற்புதமானது. தென் இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிட்ட பாணியை கடைபிடிக்கிறார்கள். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அதை நான் ரசித்தேன். அது எனக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது'' என்று மகிழ்ச்சியுடன் பேசினார்.

தொடர்ந்து இந்திய சினிமாவின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் சிலாகித்து பேசிய ஷாருக்கான், தனக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் தென் இந்தியா சினிமாவை புகழ்ந்து பேசியதற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்துள்ள நெட்டின்சன்கள், ''முன்பெல்லாம் இந்தியா சினிமா என்றாலே, பாலிவுட் திரைப்படங்களை மட்டும்தான் பேசுவார்கள். ஆனால் இப்போது தமிழ், கன்னடம், மலையாள திரையுலகில் இருந்து சிறந்த திரைப்படங்கள் வெளிவருகின்றன. அண்மையில் தமிழில் வெளியான விடுதலை பார்ட் 1, பொன்னியின் செல்வன் 1 உள்ளிட்ட பல்வேறு படங்கள் ரசிகர்களின் அளப்பரிய வரவேற்பை பெற்றன.

இதேபோல் ஆர்ஆர்ஆர், பாகுபலி ஆகிய திரைப்படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றன. இது தவிர சிறு பட்ஜெட்டில் வெளியாகும் படங்களும் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதற்கு உதாரணமாக மலையாளத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' திரைப்படத்தை கூறலாம். தென் இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகி வருவதற்கு தரமான இளம் இயக்குநர்கள் உருவாகி வருவதே காரணம்'' என்று கூறியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow