ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசு பதவி… அதிமுக கண்டனம்..!
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். அவர் இந்த தற்காலிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு பதவி வகிப்பார். இப்பணி நியமனத்திற்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே. வெங்கட நாராயணா திரைப்பட தயாரிப்பாளராக அறியப்படுகிறார். தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நடித்துவரும், அவரது கடைசி திரைப்படமாகக் கூறப்படும் 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நியமனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள #பொய்க்கால்_குதிரை_அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா விஜய்?
அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?
புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்” என்று கண்டனங்களை பதிவு செய்துள்ளது.
What's Your Reaction?