இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர்- மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் முக்கிய கோரிக்கை
இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்சிடம் இந்தியா - அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை இந்தியா உறுதியுடன் தெரிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே விரிவடைந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இந்தியா - அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை இந்தியா உறுதியுடன் தெரிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
"வெளிநாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும், இரு தரப்பு ஒப்பந்தங்களிலும் இந்தியா இதுவரை வேளாண்மையை சேர்க்காமல் தவிர்த்து வருகிறது. அதற்கு காரணம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் அந்த அரசுகள் உற்பத்தி மானியத்தை வழங்குகின்றன. உற்பத்தி செலவுக்கு இணையாக உற்பத்தி மானியம் வழங்கப்படுவதால், உற்பத்தி செய்த பொருளை மேற்கண்ட நாடுகளில் உள்ள விவசாயிகள் மிகக்குறைந்த விலையில் உலக சந்தையில் விற்று வருகிறார்கள்.
ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய விலையே கிடைக்காமல், உற்பத்தி மானியமும் கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து கடுமையான சிக்கலில் இருந்து வருகிறார்கள். வங்கிகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் ஆண்டுக்கு பத்தாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட மேலைநாடுகளில் உள்ள விவசாயிகள் குறைந்தபட்சம் 500 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை செய்கின்றனர், ஆனால் இந்தியாவில் 92% விவசாயிகள் 5 ஏக்கருக்கும் குறைவாக வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளே ஆவார்கள்.”
இந்தியாவின் சிறு-குறு விவசாயிகள் நிலை என்னவாகும்?
”அமெரிக்க வர்த்தக அமைச்சர் இந்தியா தனது வேளாண் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்றும், இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்த பேச்சுவார்த்தையில் விவசாய பொருட்களை விலக்கி வைக்க முடியாது எனவும் கூறி வருகிறார், ஆனால் இதுவரை இந்திய அரசின் சார்பில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்ததற்கான பேச்சுவார்த்தையில் வேளாண்மை இடம்பெறாது என்று தெளிவுபடுத்தப்படவில்லை, அதையும் மீறி அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை இடம்பெறுமானால் பால் பொருட்கள், கோதுமை, பருத்தி, சோயா பீன்ஸ், பாதாம், பிஸ்தா, வால்நட், ஆப்பிள் உள்ளிட்ட தோட்டக்கலை உணவுப் பொருட்களை அமெரிக்க உணவு நிறுவனங்கள் இந்திய சந்தையில், குறைந்த விலையில், பெருமளவில் குவித்து விற்பனை செய்வார்கள் என்பதால் இந்தியாவில் 92% சிறு - குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்தியாவின் உற்பத்தி செலவைவிட அமெரிக்கவில் உற்பத்தி செலவு குறைவு, ஏனென்றால் அங்கு உணவு உற்பத்திக்கு அளிக்கப்படும்
உற்பத்தி மானியம் மிக மிக அதிகம். இந்தியாவில் உற்பத்தி மானியமே விவசாயிகளுக்கு கிடையாது, அப்படி இருக்கும்போது அதிக உற்பத்தி மானியங்களை பெறும் அமெரிக்க விவசாயிகளும், அமெரிக்க நிறுவனங்களும், அமெரிக்க விவசாய பொருட்களை கொண்டு வந்து இந்தியாவில் மிக குறைந்த விலைக்கு சந்தைப்படுத்தும்போது, அமெரிக்காவுடன் போட்டியிட முடியாமல், இந்திய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற நேரிடும். அப்போது உணவுக்காக அமெரிக்காவிடம் இந்தியா கையேந்த வேண்டிய நிலைக்கு அமெரிக்கா கொண்டு சென்று விடும் என்பதே உண்மையாகும்.
மேலும் அமெரிக்கா குறைந்த விலையில் உணவு என்கிற பெயரில் பொதுமக்களுக்கு மரபணு மாற்றப்பட்ட பொருட்களை, உடலுக்கு பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை திணிக்கும்போது பொதுமக்களுக்கு பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்க உணவுப் பொருட்களை தங்களது நாடுகளில் ஏற்கனவே இறக்குமதிக்கு அனுமதித்த நாடுகளில் விவசாயிகள் அமெரிக்க உணவு நிறுவனங்களோடு போட்டியிட்டு பொருளை விற்க முடியாமல், விவசாயத்தை விட்டு வெளியேறி, வாழ்வாதாரத்தை இழந்து வருவது தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்காவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மையை சேர்ப்பது என்பது இந்திய வேளாண்மையையும் விவசாயிகளையும் அழிவு பாதையில் கொண்டு செல்லும் என்பதை இந்திய அரசு உணர்ந்து இருந்தாலும், அதை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருப்பது விவசாயிகளை கடுமையான அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. எனவே இந்திய பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய வேளாண்மையை எக்காரணம் கொண்டும் சேர்ப்பதற்கு அனுமதிக்க கூடாது. அதை உறுதிப்பட அமெரிக்காவிடம் தெரிவித்து அறிக்கையாக வெளியிட வேண்டுமென” தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
What's Your Reaction?






