செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4 வரை நீட்டிப்பு!.. ஓராண்டாக சிறைவாசம்.. ஜாமின் எப்போது
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு ஏப்ரல் 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதய அறுவை சிகிச்சை செய்த அவர் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் செந்தில் பாலாஜி தனது உடல்நலனை காரணம் காட்டி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை ஜாமின் கோரினார். அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. உச்சநீதிமன்ற கதவுகளை தட்டிய பிறகும் ஜாமின் கொடுப்பதில் அமலாக்கத்துறை முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற போது அவருக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து மே 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு கூடுதல் மனு செய்தது.
இதனை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் ஆவணங்கள் வழங்கப்பட்டது. கடந்த 25ம் தேதி நடந்த வாதத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ‛‛தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணம் மற்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் வித்தியாசம் உள்ளது. தேதி, மாதம் திருத்தப்பட்டுள்ளது. உண்மை கண்டறிய நிபுணர் குழு ஆய்வு அல்லது தடயவியல் துறை சோதனை மேற்கொள்ள வேண்டும்'' என கூறப்பட்டது.
இதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர், ‛‛ஆவணங்களில் திருத்தம் எதுவும் செய்யவில்லை. வேறுபாடுகள் இல்லை. ஒரிஜினல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளது. ஜெராக்ஸ் ஆவணங்கள் கருப்பு, வெள்ளையில் உள்ளன. இதுதான் வித்தியாசம்'' என வாதிட்டார். இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
அதன்படி இன்று ( ஏப்ரல் 30) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதாவது வங்கி சார்பில் அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்ப்பிக்கும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என கூறப்பட்டது.
இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனுவுக்கு அமலாக்கத்துறையிடம் பதில் கோரிய நீதிமன்றம் மனு மீதான விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. முன்னதாக புதிய மனுத்தாக்கலால் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.
இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைகிறது. இதையடுத்து அவர் காணொலி காட்சி மூலம் சிறையில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அதன்பிறகு அவரது நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 4ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36வது முறையாக நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார் நீதிபதி அல்லி.
செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 11 மாதங்களாக சிறையில் உள்ளார். ஜூன் மாதம் வரைக்கும் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பதால் அவர் ஓராண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
What's Your Reaction?