வீடு இல்லைனு கவலை வேண்டாம்.. கலைஞரின் கனவு இல்லம்.. ஒரு லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள்..! பட்ஜெட்டில் அறிவிப்பு!
வறுமையை ஒழிக்க 5லட்சம் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து ”முதலமைச்சரின் தாயுமானவர்” போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அமைச்சர் தங்கம் தென்னரசு, வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என அறிவித்துள்ளார்.
2024-2025-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.அதில், வரும் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் எனவும், ஒரு வீட்டின் மதிப்பு ரூ.3.5 லட்சம் எனவும், இதற்காக ரூ.3,500கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அத்தோடு, ரூ.365 கோடியில் 2,000 மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்படும் எனவும், ஊரகப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார ரூ.500கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.தேசிய ஊரக வேலைவாய்ப்புக்கு ரூ.300 கோடியும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2,482 கிராமங்களுக்கு ரூ. 1,147 கோடியும் நிதி ஒதுக்கப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், வடசென்னையில் கழிவுநீர் அகற்று மற்றும் குடிநீர் மேம்பாட்டுக்கு ரூ.948 கோடியில் புதிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ரூ.1,500 கோடியில் அடையாறு கால்வாய் சீரமைக்கப்படும் எனவும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பசுமையை மேம்படுத்த ”நகர்ப்புற பசுமை திட்டம்”, வறுமையை ஒழிக்க 5 லட்சம் ஏழைக் குடும்பங்களை கண்டறிந்து ”முதலமைச்சரின் தாயுமானவர்” போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியும், 5,000 ஏரிகள், குளங்கள் புனரமைக்க ரூ.500 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?