10 பேரின் உயிரை காவு வாங்கிய சிவகாசி பட்டாசு ஆலை.. உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டி பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் ( மே 9) பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலை நாக்பூர் உரிமத்துடன் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. மேலும், விசாரணையில் பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் மற்றொரு நபருக்கு ஆலையை குத்தகைக்கு விட்டதும், குத்தகைக்கு எடுத்த நபர், பட்டாசு தொழிலாளர்களை மரத்தடியில் அமரவைத்து பணி செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டதும் அம்பலமானது.
இந்த நிலையில் விதிகளை மீறி பட்டாசு ஆலை செயல்பட்டதால் ஆலையின் நாக்பூர் உரிமத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு (PESO) அமைப்பு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, விதிகளை மீறி பட்டாசு ஆலை நடத்தினால் உரிமையாளர் மற்றும் போர்மேன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?