சொத்து குவிப்பு வழக்கு- சிக்கலில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Apr 25, 2025 - 12:33
சொத்து குவிப்பு வழக்கு- சிக்கலில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
agri minister mrk panneerselvam in trouble with property accumulation case

கடந்த 2006-2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை மேற்கோள் காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

6 மாதங்களில் விசாரணை:

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அமைச்சர் செந்தில்பாலாஜி, துரைமுருகன் மீதான வழக்குகளின் உத்தரவுகள் திமுகவிற்கு பின்னடைவாக அமைந்துள்ள நிலையில், தற்போது அந்த பட்டியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இணைந்துள்ளார்.

Read more: முன்னாள் அமைச்சரின் கணவர் மறைவு- அதிமுக பொதுச்செயலாளர் EPS நேரில் அஞ்சலி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow