ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட்.. நூல் பிடித்து வந்த ED... அடுத்து சிக்கப்போகுவது யார்?

நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில், முதல் முறையாக அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியிருக்கிறது. டெல்லியில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை நூல் பிடித்து வந்த அமலாக்கத்துறை, ஜாபர் சாதிக்கின் வீடு, இயக்குநர் அமீரின் அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியிருப்பதால், அடுத்து சிக்கப் போவது யார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Apr 9, 2024 - 11:20
ஜாபர் சாதிக் வழக்கில் ட்விஸ்ட்..  நூல் பிடித்து வந்த ED... அடுத்து சிக்கப்போகுவது யார்?

சர்வசேத அளவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கடத்தல் மூலமாக வந்த பணத்தை, அரசியல் கட்சிகளுக்கு ஜாபர் சாதிக் வழங்கியதும், அந்த பணத்தை வைத்து 'இறைவன் மிகப்பெரியவன்', 'மங்கை' உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்ததும் விசாரணையில் தெரியவந்தது. அடுத்தடுத்து சூடுபிடித்த இந்த வழக்கு தொடர்பாக, ஜாபர் சாதிக்கின் தொழில் கூட்டாளிகள், நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

பிரபல திரைப்பட இயக்குநர் அமீர், ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பராக இருந்துவந்த நிலையில், கடந்த 2-ம் தேதி அவரை டெல்லி தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட 12 மணிநேரம் நடைபெற்ற விசாரணையில், ஜாபர் சாதிக் யார் யாரை சந்தித்தார்?... என்னென்ன வழிகளில் பணத்தை செலவழித்தார்... என்று துருவி துருவி அமீரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டனர்.

இந்த நிலையில் தான், தற்போது முதல் முறையாக அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் களமிறங்கியிருக்கிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு ஒரு பையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவலும் வெளியாகியிருக்கிறது.

அதே சமயம், சென்னை தியாகராய நகரில் உள்ள இயக்குநர் அமீரின் அலுவலத்திலும், ஜாபர் சாதிக்கின் நண்பர் புகாரி என்பவர் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

குறிப்பாக சென்னையில் 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதால், முக்கிய அரசியல் புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஜாபர் சாதிக், திமுகவின்  முன்னாள் நிர்வாகி என்பதால், தேர்தல் தேதி நெருங்கும் நேரத்தில், அமலாக்கத்துறை இந்த வழக்கில் களமிறங்கியிருப்பது, திமுக தலைமைக்கு கலக்கத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை கண்டறிவதையும், அதை தற்காலிகமாகப் பறிமுதல் செய்வதையும் பணியாக கொண்டிருக்கும் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், இந்த கடத்தல் வழக்கில் அடுத்து சிக்கப்போகுவது யார்? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்திருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow