கோகோ முதல் ரோஸ்மேரி வரை... விவசாயிகளின் கேள்விகளுக்கு நிபுணர் பதில்கள்!
கோகோவில் மாவுப்பூச்சி மேலாண்மை, கறவை மாடுகளின் நோய்கள், லெமன் கிராஸ் சாகுபடி, பெங்கால் ப்ளாக் ஆடுகள் மற்றும் ரோஸ்மேரி சாகுபடி உள்ளிட்ட விவசாயிகளின் முக்கிய கேள்விகளுக்கு பயனுள்ள விளக்கங்கள்.
கோகோ சாகுபடியில் மாவுப்பூச்சி மேலாண்மை செய்யும் முறை விபரங்கள் வேண்டும்?
விவசாயத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூச்சித் தாக்குதல். அதிலும் மிக மோசமானதாக கடந்த பல வருடங்களாக படுத்தி எடுக்கின்றது மாவுப்பூச்சி. பப்பாளி போன்ற இனிப்புப் பயிர்களில் மட்டுமில்லாது மிளகாயிலும்கூட இதன் தாக்குதல் மிக மூர்க்கமாக இருப்பதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
மிளகாயையே தாக்கும் மாவுப்பூச்சி, சாக்லேட்டின் அடிப்படைப் பொருளான கோகோவை விட்டு வைக்குமா என்ன?!
கோகோவில் மாவுப்பூச்சி மேலாண்மை செய்யும் முறைகளைச் சொல்கிறேன் கேளுங்க. முதலில் பூச்சித் தாக்குதலைத் தினமும் கண்காணிக்க வேண்டும். இது மிக முக்கியமான நிலை. தாக்குதல் வீரியத்துக்கு ஏற்பதான் நாம பதிலடிக்கான அளவைத் தீர்மானிக்க முடியும்.
இயற்கை எதிரிகளைப் பயன்படுத்தி மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். அதாவது காக்சிநெலிட்ஸ் மற்றும் லைகானிட்ஸ், என்சிர்டிஸ் போன்றவை. மருந்து தெளிக்கும் முன்பாக, பாதிக்கப்பட்ட செடிகளின் பாகங்களை சேகரித்து அழிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போதே வேப்ப எண்ணெய் மூன்று சதவீதம் மீன் எண்ணெய், ரோசின் சோப்பு கரைசல் லிட்டருக்கு இருபத்தைந்து கிராம் என கலந்து தெளிக்க வேண்டும்.
கறவைப் பசுக்கள் வளர்க்கும் திட்டத்துக்கு வந்துள்ளேன். மாட்டினங்களைத் தாக்கும் நோய்கள் என்னென்ன?
பொதுவான தாக்குதல் நோய்களை வரிசைப்படுத்திடுறேன். ஆனால், அதற்கு முன்பு ஒரு வேண்டுகோள்- நாட்டின கறவை மாடுகளை வாங்கி வளர்க்கலாம். இதன் பாலே மருந்துதான். கலப்பின பசுக்களுக்கு பலவித நோய் பிரச்னை இருக்கிறது. ஆனால், நாட்டின மாடுகளை அவ்வளவு எளிதில் நோய் அண்டாது. அப்படியே வந்தாலும் தன்னைத்தானே சரி செய்து கொள்வதிலோ அல்லது எளிய கைவைத்திய மருந்துகளை உண்டு தன்னை சீர்செய்து கொள்வதிலோ தேர்ந்தவை அவை. மேலும் நாட்டினப் பசும்பாலை விற்பதன் மூலம் இந்தச் சமுதாய மக்களுக்கு மிகப்பெரிய நன்மையை நீங்க பண்றீங்கன்னு அர்த்தம். அதேவேளையில் கலப்பினப்பசுவின் பாலை விட நாட்டினப் பசும்பால் விலை மிக அதிகம். அதன் மூலம் உங்களுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் என்பதையும் நான் சொல்ல வேண்டியதில்லை.
பசுக்களைத் தாக்கும் பொதுவான நோய்கள்- கண்நோய், சினை பிடிப்பதில் சிக்கல், புண், அஜீரணம், பால்மடி வீக்கம், வயிற்று உப்புசம், மடி நோய், வயிற்றுப் போக்கு, இருமல்... இவை வழக்கமாக வரக்கூடியவை. இவற்றுக்கு அதிகப் பணம் செலவு செய்து கெமிக்கல் மருந்துகளை வாங்கித் தராமல், கூடிய அளவுக்கு கை வைத்திய முறைகளின் மூலமே தீர்வு காணுங்கள். அது உங்களின் கைக்காசுக்கும், கால்நடைகளின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
லெமன் கிராஸ் வளர்ப்பு முறை மற்றும் பக்குவங்கள் தெரிஞ்சுக்கணும்?
சொல்லலாமே- லெமன் கிராஸை 'சுக்குனாரி புல்' அப்படின்னும் அழைப்பாங்க! அந்தச் செய்தி உங்களுக்குத் தெரியுமா? ஒரு வருஷம் ஆன செடியில் இருந்து பக்க தூர்களைக் கொண்டு நடவு செய்யணும். நடவு செய்யும் முன்பாக நன்கு உழுது, அதில் உள்ள சிறுசிறு வேர்களை எடுத்துவிட வேண்டும். பக்கத் தூர்களை நடவு செய்யும் போது இருபது செ.மீ. உயரம் உள்ளதாக இருக்க வேண்டும். பக்கத் தூர்களை நடவு இடைவெளி வரிசைக்கு வரிசை 45 செ.மீ. தூர்களின் இடைவெளி 30 செ.மீ. இருக்க வேண்டும். நடவு செய்தவுடன் தண்ணீர் பாய்ச்சணும்.
ஏக்கருக்கு நாலு டன் தொழு உரம், நாற்பது கிலோ சூப்பர் பாஸ்பேட், நாற்பது கிலோ பொட்டாஷ், ஆறு தவணைகளாக பிரிக்கப்பட்ட நூற்றைம்பது கிலோ யூரியா தேவைப்படும். பயிரிட்ட மூன்று மாதங்களுக்கு இருமுறை களை எடுக்கணும். பிறகு ஒவ்வோர் அறுவடைக்குப் பிறகும் களை எடுக்கணும். பயிர் நடவு செய்தவுடன் நீர் பாய்ச்சணும். பிறகு வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. லெமன் கிராஸை பெரிதாக நோய் தாக்கும் புகார்களில்லை. பயிர் நட்ட எட்டு மாதத்திற்குள் அறுவடை, பிறகு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அறுவடை பண்ணலாம்... பக்குவம் போதுங்ளா?
பெங்கால் ப்ளாக் ஆடுகள் குட்டை இனம் தானா? இவற்றின் தன்மை எப்படி?
ரெண்டு அடி உயரம்தான் அதிகபட்சமாக வளரக்கூடியவை, மிகக் குறைவான எண்ணிக்கையிலான ஆடுகள் அதனினும் சற்று அதிக உயரம் வளரலாம். தமிழக கால்நடை வளர்ப்பாளர்களால் பெரிதும் அறியப்படாத ரகமிது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியானவைன்னு கேரள பகுதி வளர்ப்பாளர்கள் சொல்றாங்க. இதுதான் வேணும், அதுதான் வேணும்னு அடம் பண்ணாமல் எந்த வகை பசுந்தீவனங்களையும் ருசிச்சு சாப்பிட்டு வளரக்கூடியவை இவை.
ரோஸ்மேரி பயிரிடல்ல இறங்குறேன். மண், காலநிலை மற்றும் அறுவடை தொழில்நுட்ப முறைகளை தேவை?
மலைப்பகுதிக்கு ஏற்ற மகிழ்வான சாகுபடிங்க ரோஸ்மேரி. ரோஸ்மேரிக்கான பூமியானது தண்ணீர் நன்றாக வடியும் தன்மை கொண்ட நிலங்களிலும், மணற்பாங்கான நிலங்களிலும் இந்தப் பயிர் வளரும் தன்மையுடையது. மிதமான வெப்பநிலை கொண்ட இடங்களில் வளரக்கூடிய தாவரம் இது. அறுவடையைப் பொறுத்தவரையில். நடவு செய்த முதல் எட்டு மாதத்தில் முதல் அறுவடையைச் செய்யலாம்.
பிறகு ஒவ்வோர் அறுவடையும் மூன்று மாத இடைவெளியில் செய்யலாம். அதிக இலைகள் உள்ள காலங்களிலும், சிறு சிறு பூக்கள் உள்ள நேரங்களிலும் அறுவடை செய்ய வேண்டும். அதிக தண்டு வளர விடக்கூடாது. அறுவடை செய்த இலை பாகங்களை உடனடியாகவும் டிஸ்லேசன் செய்யலாம். நிழலில் உலர்த்தி சிறிது நாட்கள் கழித்து கூடவும் டிஸ்லேசன் செய்யலாம். இதனால் எண்ணெய் சேதாரமாகாது. ரோஸ்மேரி பயிரிடலுக்கு ஒரு ஏக்கருக்கு நான்கு டன் எரு, நாற்பது முதல் அறுபது கிலோ சூப்பர் பாஸ்பேட், நூறு கிலோ (ஐந்து தவணைகளாக பிரிக்கப்பட்டு) யூரியா தேவைப்படலாம்.
What's Your Reaction?