தலையங்கம்: கூட்டணி ஆட்சி நல்லதா?

தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதிகாரப் பங்கீடு கோரிக்கைகளால் குதிரைப்பேரம் மற்றும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு மாநில நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

தலையங்கம்: கூட்டணி ஆட்சி நல்லதா?
தலையங்கம்

தமிழகத்தில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமையலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அதிகாரப் பங்கீடு கோரிக்கைகளால் குதிரைப்பேரம் மற்றும் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு மாநில நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இன்று வரை ஒரு கட்சிக்கே முழுமையான ஆட்சி அதிகாரத்தைத் தங்கள் தேர்தல் தீர்ப்பாகக் கொடுத்துவருகிறார்கள் தமிழக மக்கள். இடையில், ஒரே ஒரு தடவை மட்டும் பெரும்பான்மை இல்லாத அரசாக ஆண்டது தி.மு.க. அப்போதும்கூட ஆட்சி அதிகாரத்தில் யாருக்கும் பங்கு கொடுக்காமல், 'மைனாரிட்டி தி.மு.க. என்ற ஜெயலலிதாவின் கடும் விமர்சனங்களோடே ஐந்தாண்டுக் கால ஆட்சியை நடத்தி முடித்தார் கருணாநிதி.

ஆனால், நடக்கவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத ஒரு சூழல் நிலவுவதாக சில அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர். 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையைத் தி.மு.சு.வின் கூட்டணிக் கட்சிகள் வெளிப்படையாக விவாதித்ததைப் பார்த்தோம். இப்போதைக்குத் தி.மு.க. தலைமை அதைச் சமாளித்து அமுக்கிவிட்டாலும், தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் எப்படிப் போகுமோ தெரியாது!

அ.தி.மு.க-வில் 'ஆட்சியில் பங்கு" கோஷம் அத்தனை வெளிப்படையாகக் கேட்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் மறைமுகத் திட்டம் அதுவாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அ.தி.மு.க-வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்துவிடக் கூடாது; தங்கள் ஆதரவோடுதான் அவர்கள் ஆட்சி அமைக்கும் நிலை வரவேண்டும் என்று பா.ஜ.க. எதிர்பார்ப்பது இயற்கைதான்!

விஜய் தன் ஆரம்பக் கட்டப் பிரச்சாரத்திலேயே 'ஆட்சியில் பங்கு தருவதாக அறிவித்தார். ஆனால், கடை விரித்தும் அவருடன் கூட்டணி கொள்வதற்குத்தான் யாருமே முன்வரவில்லை. ஒருவேளை, அவர் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவரையோ சீமானையோ, இரண்டில் ஒரு திராவிட கட்சி கூட்டணி ஆட்சிக்குக் கூப்பிடலாமோ என்னவோ..!

இதற்கெல்லாம் மேலாக, தி.மு.க. கூட்டணி சார்பாக வென்ற கட்சி, அதி.மு.க. தலைமையில் கூட்டணி அரசு அமைக்கவும்... அ.தி.மு.க. தயவோடு வென்ற கட்சி, தி.மு.க-வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கவும் முன்வரும் நிலை ஏற்படலாம்.

கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு நல்லதா என்பது தனியாக விவாதம் நடத்த வேண்டிய ஒரு தலைப்பு! ஆனால், அதுதான் தலைவிதி என்று தேர்தல் முடிவுகள் நிர்ணயித்தால்..? குதிரைப்பேரம் நடத்தும் சூழல் ஒருவேளை வந்தாலும், புதிய ஆட்சி அமைவதில் வேண்டாத தாமதங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது. அது மாநிலத்தின் நலனுக்கு ஏற்றது அல்ல என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow