ரூ.109 கோடி செலவு... ரூ.271 கோடி Fixed Deposit! அதிமுக கஜானா கணக்கு வெளியானது..!

2026 தேர்தலுக்காக ரூ.109.61 கோடி செலவிட்டதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கணக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியிடம் ரூ.296 கோடி கையிருப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2026 - 13:02
ரூ.109 கோடி செலவு... ரூ.271 கோடி Fixed Deposit! அதிமுக கஜானா கணக்கு வெளியானது..!

2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் முடிந்துவிட்டது... ஆனால் தேர்தல் செலவுக் கணக்குகள் மட்டும் இப்போது பேசுபொருளாகி வருகின்றன. தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தாக்கல் செய்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், கட்சி தேர்தல் பணிகளுக்காக செலவிட்ட மொத்த தொகை ரூ.109.61 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணைய செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், பிரச்சாரம் முதல் தேர்தல் அறிக்கை அச்சிடுவது வரை செய்யப்பட்ட செலவுகள் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

எங்கே அதிக செலவு?

அதிமுகவின் தேர்தல் செலவில் பெரும்பகுதி விளம்பரம் மற்றும் ஊடகங்களுக்கே சென்றிருக்கிறது. நாளிதழ்கள், தொலைக்காட்சி, சமூக வலைதள விளம்பரங்கள் உள்ளிட்ட பிரச்சாரப் பணிகளுக்காக மட்டும் சுமார் ரூ.103.98 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்காக ரூ.1.28 கோடி செலவாகியிருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் கட்சி சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்காக ரூ.17.37 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதிமுக தெரிவித்துள்ளது.

எடப்பாடி பிரச்சாரத்துக்கு இவ்வளவுதானா?

இதில் கவனம் ஈர்க்கும் மற்றொரு விஷயம் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரச் செலவு. அவரது பிரச்சாரப் பயணத்துக்காக ரூ.1.75 லட்சமும், வாகன டீசல் செலவுக்காக ரூ.4.14 லட்சமும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைகள், ஃபார்ம்-ஏ, ஃபார்ம்-பி உள்ளிட்ட படிவங்களைத் தயாரித்து அச்சிடுவதற்காக ரூ.4.11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செலவு போக கஜானாவில் எவ்வளவு?

தேர்தல் களத்தில் ரூ.109 கோடிக்கு மேல் செலவு செய்திருந்தாலும், தேர்தல் செலவுகள் அனைத்தும் போக அதிமுகவிடம் ரூ.296 கோடி நிதி கையிருப்பில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அதில் மட்டும்... கரூர் வைஸ்யா வங்கியில் Fixed Deposit ஆக ரூ.271 கோடி இருப்பதாக அதிமுக கணக்கு காட்டியுள்ளது.

தேர்தல் முடிந்த பிறகும் கணக்கில் இருக்கும் இந்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் கையிருப்புதான் இப்போது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow