முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார் விசாரணை- சென்னை ஐகோர்ட் உத்தரவு

புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவு

Nov 28, 2023 - 15:33
Nov 29, 2023 - 07:14
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான புகார் விசாரணை-  சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ்.அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல், கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 2,028 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு நீதிபதி A.D.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்றும், இரண்டு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஆறு மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.மேலும் நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் இரு புகார்தாரர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆறு மாதங்களில் விசாரணையை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்று, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்குகளை முடித்து வைத்தார்.மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow