பெண்களின் மாங்கல்யம் மீது எதிர்கட்சியினரின் கண்கள் உள்ளது.. இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர் மோடி
காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் நாட்டு மக்களின் வருமானம் மற்றும் சொத்துகள் மீதே கண்ணாக உள்ளன என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வரும் 26ஆம் தேதி 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அலிகார் பகுதியில் பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர், "சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இஸ்லாமியர்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக எதையும் செய்ததில்லை எனக் குற்றம்சாட்டினார். முத்தலாக் காரணமாக நாட்டின் பல மகள்கள், தந்தை, சகோதரர்கள், குடும்பத்தினர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் எனவும் தற்போது முத்தலாக் தடைச் சட்டம் காரணமாக அவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சவுதி அரேபியா பட்டத்து இளவரசரிடம் கோரிக்கை விடுத்ததின் பேரில் ஹஜ் பயணம் செய்வதற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, ஹஜ் யாத்திரை செல்லும் கனவு நிறைவேறிய ஆயிரக்கணக்கான சகோதரிகளால் நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன் எனப் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "காங்கிரஸ் மற்றும் I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் நாட்டு மக்களின் வருமானம் மற்றும் சொத்துகள் மீதே கண்ணாக உள்ளன என்று எச்சரிக்க விரும்புகிறேன். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் யார் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், யாருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்பது குறித்து விசாரிப்பார்கள். I.N.D.I.A. கூட்டணியின் கண்கள் தற்போது பெண்களின் மாங்கல்யம் மீது உள்ளது. அவர்களுக்கு நமது தாய், சகோதரிகளின் தங்கத்தைத் திருடுவதுதான் எண்ணம் எனவும் விமர்சனம் செய்தார்.
மேலும், "சுதந்திரத்திற்கு பிறகு உத்தரபிரதேசத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. ஆனால் அது யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் ஏற்பட்டது. அவரை புல்டோசரால் மட்டும் அடையாளம் காண்பவர்களின் கண்களை திறக்க நினைக்கிறேன். யோகியின் அரசு உத்தரபிரதேசத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. அவர் எனக்கும் முதலமைச்சராக இருக்கிறார். இப்படிப்பட்ட நண்பர்கள் இருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
What's Your Reaction?